* தேவையெழுந்தால் புடலங்காய், இரும்புத்துண்டுடனும் பேச்சு; ஜெயராஜ்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவசியமேற்பட்டால் புடலங்காயுடன் பேச்சுவார்த்தை நடத்துவாரெனத் தெரிவித்த ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து ஜே.வி.பி.யுடன் அரசாங்கம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துமெனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வாய்மூல வினாக்களுக்கு விடையளிக்கும் போது ஆளும்கட்சி பிரதம கொரடா மேலும் தெரிவித்ததாவது;
ஜே.வி.பி.யினர் விமர்சனங்களைக் கைவிட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முன்வருதல் வேண்டும். எத்தகைய திட்டங்களையும் குழப்ப முயலக்கூடாது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து ஜனாதிபதி ஜே.வி.பி. யுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார். ஜனாதிபதி அவசியமேற்பட்டால் புடலங்காயுடனும் , இரும்புத் துண்டுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார்.
இது குறித்து எவரும் கேள்வியெழுப்ப முடியாது. ஜனாதிபதி பல்வேறு விடயங்களுக்காக எதிர்க்கட்சித் தலைவரை அழைத்துப் பேசினார். இதனையறியாத அக்கட்சி எம்.பி.க்கள் சிலர் தமது தலைவரை விமர்சிக்கின்றனர் என்றார்.
இதன்போது குறுக்கிட்ட ரணில் விக்கிரமசிங்க;
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ஐ.தே.க.விடம் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரினார் என்றார்.
இச்சமயம் குறுக்கிட்ட ஜே.வி.பி.எம்.பி.க்கள் பல விமர்சனங்களை முன் வைத்தனர். எனினும் அவ்விமர்சனங்களுக்கு ஐ.தே.க. தரப்பிலிருந்து பதில் வழங்கப்படாத நிலையில் ஆளும் கட்சி பிரதம கொரடா ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஐ.தே.க. தலைவர் ரணில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும் அக்கட்சியின் உபதலைவர் பதவியைக் கைப்பற்ற போட்டி நடப்பதாகவும், எனவே, முதலில் அதனைப் பேசித் தீர்க்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.