19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் சாம்பியன் கிண்ணத்தை வென்ற இந்திய இளைஞர் அணி நேற்று பெங்களூர் திரும்பியபோது, விமான நிலையத்திலிருந்து வீரர்கள் வாகன அணிவகுப்புடன் திறந்த பஸ்சில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
கோலாலம்பூரில் நடந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டியில் 12 ஓட்ட வித்தியாசத்தில் தென்ஆபிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.
சாம்பியன் கிண்ணத்தை வென்ற இந்திய இளைஞர் அணி வீரர்கள் தனி விமானம் மூலம் நேற்று பெங்களூர் திரும்பினர். அந்த விமானம் நேற்று மாலை விமான நிலையத்தை வந்தடைந்தது.
விமான நிலையத்திலிருந்து வீரர்கள் அனைவரும் திறந்த பஸ்ஸில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். 20 ஓவர் போட்டியில் உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு மும்பையில் அளிக்கப்பட்ட வரவேற்பு போல் மோட்டார் சைக்கிள் படையினரின் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஊர்வலம் சின்னச்சாமி ஸ்ரேடியம் வந்தடைந்ததும் அங்கு வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் சபைத் தலைநகர் சரத்பவார், தொழில் அதிபர் விஜய் மல்லையா மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
விழாவில் அணி வீரர்களுக்கு தலா 15 இலட்சம் ரூபா ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.