பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு இந்திய கிரிக்கெட் சபை ஒரு போதும் உதவியதில்லையென்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஜாவிட்மியான்டாட் மற்றும் மொயின்கான் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது பற்றி இறுதி முடிவெடுக்காமலிருக்கிறது. இந்த சுற்றுப்பயணம் குறைந்த போட்டிகளைக் கொண்டதாக சுருக்கப்படலாமெனத் தெரிகிறது.
இதனையடுத்து இந்தியாவோடு ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்தது. ஆனால் இந்திய கிரிக்கெட் சபை இதனை ஏற்கவில்லையென்று தெரிகிறது.
இந்திய வீரர்களுக்கு போதிய ஓய்வு இருக்காது என்பதால் இந்த யோசனையை கிரிக்கெட் சபை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஜாவிட் மியான் டாட் மற்றும் மொயின்கான் இந்திய கிரிக்கெட் சபை மீது புகார் கூறியுள்ளனர்.
இந்தியா நினைத்தால் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட முடியுமென்று கூறிய அவர்கள், இந்திய கிரிக்கெட் சபை ஒருபோதும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு உதவியதில்லை என்று கூறியுள்ளனர்.
இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாட ஒப்புக் கொண்டால் அது அவுஸ்திரேலிய அணிக்கு சரியான பாடத்தை கற்றுக் கொடுக்குமென்று அவர்கள் கூறியுள்ளனர்.
மூத்த வீரர்கள் மற்றும் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இளம் வீரர்களை கொண்ட அணியை இந்தியா அனுப்பி வைக்கலாம் என்றும் மியான் டாட் கூறியுள்ளார்.