முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பெங்களூர் ஓப்பன் டெனிஸ் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை அய்கோ நகமூரா வெற்றிபெற்றார்.
கர்நாடக டெனிஸ் சங்கம் சார்பில், 2006 ஆம் ஆண்டு முதல் சர்வதேச பெண்கள் டெனிஸ் போட்டி பெங்களூரில் நடத்தப்பட்டு வருகிறது. 3 ஆவது முறையாக இந்த ஆண்டு நடைபெறும் இப்போட்டி தரம் உயர்வு (டையர் 2) பெற்றுள்ளது.
2.40 கோடி ரூபா பரிசுத் தொகைக்கான பெங்களூர் ஓப்பன் டெனிஸ் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் உட்பட முன்னணி வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரிய வீராங்கனை சிபில் பாமெர் 2-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை அகிகோ மொரிகாமியை தோற்கடித்து 2 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இன்னொரு ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை அய்கோ நகமூரா 6-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீராங்கனை தாமரைனை தோற்கடித்தார்.
கடைசி தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சுனிதா ராவ், சீன வீராங்கனை சுன்டியான்டியனை சந்தித்தார். இதில் சுனிதா ராவ் 2-6, 1-6 என்ற நேர் செட்டில் சுன்டியான்டியனிடம் தோல்வியடைந்தார்.
இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அங்கிதா - சானா பாம்ப்ரி ஜோடி 6-3, 4-6, 4-10 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மொரிடா - நமிகடா ஜோடியிடம் தோல்வியடைந்தது.