முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் எம். சிவசிதம்பரம், செயலாளர் நாயகம் ஏ. அமிர்தலிங்கம் மற்றும் உப தலைவர் ஆர். சம்பந்தன் ஆகியோர் 1987 அக்டோபர் 28 இல் கூட்டாக எழுதிய கடிதம்
இலங்கை அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் மாகாண சபைகள் சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்களிலும் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் எமது ஏமாற்றத்தைத் தெரிவிப்பது எங்கள் கடமை என உணர்கின்றோம். இந்த முன்மொழிவுகள் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யாதுள்ளதுடன் தமிழ் மக்கள் அனுபவித்த உயிரிழப்புகள், துன்பங்கள் மற்றும் அழிவுகளுக்கு எவ்விதத்திலும் ஈடாகாது. 1983 ஆம் ஆண்டு முதல், இந்திய அரசாங்கத்தின் நற்சேவைகளைப் பயன்படுத்தியும் த.வி.கூ. தமிழ் மக்களுக்கு விதந்துரைக்கக்கூடிய பூரணமான அதிகாரப் பகிர்வுத் திட்டமொன்றை வகுக்கும் நம்பிக்கையுடன் இந்திய அரசாங்கத்தின் ஊடாகவும் த.வி.கூ. இலங்கை அரசாங்கத்துடன் எப்பொழுதும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.
இந்தச் சட்டமூலங்களின் உள்ளடக்கங்களை திருப்திகரமானவையும் நியாயமானவையும் நிலைக்கக்கூடியவையும் ஆக த.வி.கூ. தமிழ் மக்களுக்கு விதந்துரைக்க முடியாமையை இட்டு வருந்துகின்றது.
உடன்படிக்கையைக் கைச்சாத்திடுவதற்காக நீங்கள் இலங்கைக்குச் செல்வதற்கு முதல்நாள், வேறு பல விடயங்களுடன் இந்தியாவைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஒன்றுடன் இலங்கை நிபுணர்களும் சேர்ந்து அவசியமான சட்டவாக்கத்தை வரைய வேண்டும் எனவும் நாங்கள் தங்களைக் கேட்டுக்கொண்டோம். இது ஒரு நியாயமான வேண்டுகோள் என தாங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். இப்போது வரைவில் இந்திய நிபுணர்களின் எவ்வித பங்கேற்பும் இன்றி சட்டவாக்கம் எம்மீது திணிக்கப்படுகின்றது.
சட்டமூலம் வெளியிடப்படுத்தப்படுவதற்கு நியாயமான ஒரு காலப்பகுதியிக்கு முன்னர் அதன் ஒரு பிரதி இந்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கச் செய்யப்படும் என த.வி.கூ. முற்றிலும் எதிர்பார்த்தது. இது நடைபெறாது விடக்கூடும் என உணர்ந்து, 1987 செப்டெம்பர் 29 ஆம் திகதி த.வி.கூ.வின் தூதுக்குழுவொன்று ஜனாதிபதி ஜயவர்த்தனவைச் சந்தித்து முறைமையான இந்த வேண்டுகோளை விடுத்தது. சட்டமூலங்கள் இந்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கச் செய்யப்படாமல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதையிட்டு நாம் வருந்துகின்றோம்.
இது இந்திய அரசாங்கத்தை அவமரியாதைப்படுத்திய செயல் மட்டுமன்றி, பல்வேறு விடயங்களுடன், "எஞ்சிய விடயங்கள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தீர்க்கப்பட வேண்டும்" என்று கூறும் ஒப்பந்தத்தின் 2.15 ஆம் பந்தியை அப்பட்டமாக மீறிய செயலுமாகும். இந்தச் சட்டமூலங்கள் நிச்சயமாக ஏதேனும் அத்தகைய தீர்வின் பெறுபேறு அல்ல.
சட்டமூலங்களின் விரிவான பகுப்பாய்வின் மூலம் தங்கள் சுமையை அதிகரிக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால், சில முக்கியமான விடயங்கள் மீது தங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றோம்.
1. ஒரே நிர்வாக அலகு
ஒரு தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபை, ஓர் ஆளுநர், ஒரு முதலமைச்சர் மற்றும் ஓர் அமைச்சர்களின் சபை ஆகியவர்களைக் கொண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளவாறு, அதனை ஒரு நிர்வாக அலகாக ஆக்குவதற்கு மிகுந்த தூண்டுதல்களின் பின்னர் ஜனாதிபதி ஜயவர்த்தனவை நீங்கள் ஏற்றுக்கொள்ளச் செய்தீர்கள். அத்தகைய அலகின் நீடிப்பு 1988 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் நடத்தப்படும் மக்கள் தீர்ப்பைப் பொறுத்ததாகும். அது ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்படலாம். நாங்கள் அத்தகைய மக்கள் தீர்ப்பை ஆட்சேபித்ததுடன், இறுதியில் அது ஒருபோதும் நடைபெறாது எனவும் நம்பினோம்.
தமிழர்களுக்கு அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரசியல் ஒழுங்கமைப்பை சட்டமூலங்களின் ஏற்பாடுகள் ஒரு கேலிக்கூத்தாக ஆக்கியுள்ளது. ஒரே நிர்வாக அலகின் அமைப்பு எப்போதும் இரத்துச் செய்யக்கூடிய வெறுமனே ஒரு பிரகடனத்தின் மூலம் ஜனாதிபதியின் நிறைவேற்றுச் செயல் ஒன்றினால் மேற்கொள்ளப்பட வேண்டும். இது கூட, பல்வேறு கணிக்க முடியாத விடயங்களில் ஜனாதிபதி திருப்தியடைவதைப் பொறுத்ததாகும்.
போதிய அரசியலமைப்பு ஏற்பாட்டின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஒற்றை நிர்வாக அலகு உறுதியாக உருவாக்கப்படும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. எனினும், 13 ஆவது திருத்தத்தின் 154 ஆவது பிரிவின் ஏற்பாடு சந்தேகத்துக்கிடமான தன்மையைக் கொண்டிருந்ததுடன், இந்த அதி முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடயம் பற்றிய சட்டவாக்கத்தை மேற்கொள்வதற்கான இடையறாத அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது எனவும் பொருள் கொள்ளப்படலாம். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஒற்றை நிர்வாக அலகு என்பது, இறுதியாக அது ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதிலும் கூட, நிரந்தரமற்ற ஓர் அமைப்பாகும் என்பது பெறுபேறான நிலைப்பாடாகும்.
2. சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரம்
மாகாண சபைக்குப் பகிர்ந்தளிக்கப்படும் அதிகாரம் பொருத்தமான மாற்றங்களுடன் இந்தியாவில் மாநிலங்களால் அனுபவிக்கப்படும் அதிகாரங்களுக்கு ஒத்தவையாக இருக்குமென்றே பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய எல்லா தரப்புகளும் எப்பொழுதும் நம்பியிருந்தன. குறிப்பாக, சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரங்களில் அவ்வாறு எதிர்பார்க்கப்பட்டது. 1986 ஜூலை/ ஆகஸ்ட் மாதங்களில் இலங்கை அரசாங்கத்துக்கும் த.வி.கூ. வுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல்களின்போது, மாகாண விடயங்கள் தொடர்பாக மாகாணத்தின் சட்டவாக்க அதிகாரம் கிட்டத்தட்ட முழுமையானதாக இருப்பதுடன் ஆளுநர் தனது தற்றுணிவு அதிகாரங்கள் தெளிவாக வரையறை செய்யப்பட்ட ஒரு வைபவ ரீதியான தலைவராக இருப்பார் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மாகாண சபைகள் மற்றும் விடயங்களின் பட்டியல்கள் தொடர்பான அத்தியாயத்தைத் திருத்துவதற்கான அல்லது நீக்குவதற்கான பாராளுமன்றத்தின் அதிகாரத்தையும் அத்துடன் மாகாண சபைகளுக்கு மாற்றப்பட்ட விடயங்களில் கூட 2/3 பெரும்பான்மையுடனும் மக்கள் தீர்ப்பு ஒன்றில் வழங்கப்படும் முழு நாட்டு மக்களின் அங்கீகாரத்துடனும் சட்டம் இயற்றும் பாராளுமன்றத்தின் அதிகாரத்தையும் இந்தச் சட்டமூலங்கள் தக்கவைத்துள்ளன. சனத்தொகையின் 74% ஆக பெரும்பான்மைச் சமூகம் காணப்படும் இலங்கையில் இது இலகுவான ஒரு விடயமாகும்.
நிறைவேற்று அதிகாரம் என்னும் விடயத்தில், பிரிவு 154 ஊ (2) இதற்கு இணங்க ஜனாதிபதியின் பணிப்புகளின் பிரகாரம் பிரயோகிக்கப்படவேண்டிய ஆளுநரின் பரந்ததும் வரையறுக்கப்படாததுமான தற்றுணிவு அதிகாரத்தின் ஊடாக "குடியரசின் ஜனாதிபதியினால் மக்களின் நிறைவேற்று அதிகாரம் பிரயோகிக்கப்படும்" என ஏற்பாடு செய்யும் உறுப்புரை 4(ஆ) வின் பிரகாரம் ஆளுநர் பதவி வகிப்பார் என ஏற்பாடு செய்வதன் மூலமும் மிகவும் பரந்த அடிப்படையில் அவசரகாலப் பிரகடனத்தில் பிரயோகிக்கத்தக்க அதிகாரங்கள் ஊடாகவும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை வைத்திருப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது.
1970 ஆம் ஆண்டுக்கும் 1987 ஆம் ஆண்டுக்கும் இடையில், பத்து வருடங்களுக்கும் மேலாக இலங்கை அவசரகால விதிகளின் கீழ் இருந்தது என்பதை நினைவுகூர்தல் பொருத்தமாகும். அவசரகால பிரகடனம் தொடர்பாக இந்திய மாதிரி பின்பற்றப்படுதல் வேண்டும் என்னும் த.வி.கூ.வின் தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்தது. அவசரகால பிரகடனம் மற்றும் அரசியலமைப்பு இயந்திரத்தின் கூறுபடுதல் ஆகியவற்றின் நியாயபூர்வத்தன்மை வெறுமனே திட்டவட்டமாக மறுக்கப்பட்டதுடன், மாகாண சபைப் பட்டியலில் கூறப்பட்டுள்ள ஏதேனும் விடயம் தொடர்பாக அவசரகால ஒழுங்குவிதிகளை ஆக்கும் அல்லது மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்ட நியதிச் சட்டத்தின் தொழிற்பாட்டை விஞ்சும், திருத்தும் அல்லது இடைநிறுத்தும் தாக்கத்தைக் கொண்டிருக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. (பார்க்க உறுப்புரை 155 (3அ)
இந்த ஏற்பாடுகள் த.வி.கூ. வினால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவற்றில் சில த.வி.கூ.விடம் முன்மொழியப்படாமல் கூட இருந்தது. இந்த ஏற்பாடுகள் இந்தியாவினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதும் எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும்.
த.வி.கூ.வுடனான கலந்துரையாடல்களின் போது, மாகாண அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகரிக்கக்கூடாது என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டது. வடக்கு, கிழக்கு மாகாணம் எழுபத்தொரு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கை விட அதிகரிக்கக்கூடாது என்பது த.வி.கூ.வின் முன்மொழிவாகும். அமைச்சர்களின் எண்ணிக்கை தற்போது நான்காக வரையறுக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்வேறு மக்களிடையே பிணக்கை ஏற்படுத்தும் கபட நோக்கத்துடனும் மாகாண சபையின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்கும் வினைத்திறன்மிக்க மாகாண அரசாங்கத்தைத் தடங்கலுக்குட்படுத்தி முட்டுக்கட்டை இடுவதற்குமே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3. விடயங்களின் பட்டியல்
விடயங்களின் பட்டியல் இந்திய மாதிரிக்கு அமைவாக இருத்தல் வேண்டும் என தெளிவாக விளங்கிக்கொள்ளப்பட்டிருந்தபோதிலும், ஒருங்கியை பட்டியல் அதிகளவு விடயங்களைக் கொண்டிருக்க மாகாணப்பட்டியல் தெளிவாகவே வெறுமை மிகுந்து காணப்பட்டது. த.வி.கூ.வுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களுக்கு அமைவாக, இந்திய மாதிரியின் அடிப்படையில் ஆட்புல நீர்ப்பரப்புக்கு அப்பாற்பட்டது அல்லாத கடற்றொழில், கமத்தொழில், கால்நடை வளர்ப்பு, கைத்தொழில்கள், மாவட்டங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள், கிராம சேவகர் பிரிவுகளை உருவாக்குதல் அடங்கலாக மீள் எல்லை குறித்தல் நிர்மூலமாக்கப்பட்ட நகரங்கள், கிராமங்கள் மற்றும் சொத்துக்களைப் புதுப்பித்தலும் புனரமைத்தலும், இழப்பு அல்லது சேதம் ஏற்பட்ட ஆட்களுக்கான நட்டஈடு அல்லது நிவாரணம், பனைத் தோட்டங்களும் பனைக் கைத்தொழிலும், தென்னந்தோட்டங்களும் அவற்றுடன் தொடர்பான கைத்தொழில்களும், மாகாணத்தில் காணப்படும் மூலப்பொருட்களில் முழுமையாக அல்லது பிரதானமாக தங்கியுள்ள அரசுக்குச் சொந்தமான கைத்தொழில் முயற்சிகளின் உடைமை முகாமைத்துவம் அல்லது கட்டுப்பாடு (அரசியல் கட்சிகளில் மாநாட்டில் விதந்துரைக்கப்பட்டது), கூட்டுறவு வங்கிகள், சிறைச்சாலைகள், மாகாண அரச சேவை, மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு, உள்ளூராட்சிச் சேவைகள், மாகாணப் பட்டியலில் உள்ள ஏதேனும் நோக்கங்களுக்கான அளவீடுகள் மற்றும் புள்ளிவிபரங்கள் மற்றும் அத்தகைய ஏனையவை போன்ற விடயங்கள் மாகாணப் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. கல்வித்துறையில், மாகாண சபையில் அதிகாரங்கள், இரண்டாம் நிலைக் கல்வி விடயத்தில் கூட வரையறுக்கப்பட்டிருந்தது.
மாகாணசபைகளின் அதிகாரங்களின் நோக்கெல்லையையும் உள்ளடக்கத்தையும் முடியுமானவரை குறைக்கும் விதமாக ஒருங்கியல் மற்றும் ஒதுக்கப் பட்டியல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடரும்