Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
பிரதம நீதியரசரின் தர்மாவேசம்
[06 - March - 2008] [Font Size - A - A - A]
பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற கஷ்டங்களைக் கண்டு தர்மாவேசம் கொண்டு அரசாங்கத்தையும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் கடுமையாகச் சாடுவதை அண்மைக் காலமாக அடிக்கடி காணக்கூடியதாக இருக்கிறது. மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதில் அக்கறை காட்டாமல் அவர்களை ஏமாற்றி ஊழல் மோசடிகளிலும் முறைகேடுகளிலும் ஈடுபடுபவர்கள் நரகத்துக்கே போவார்கள் என்று பிரதம நீதியரசர் பல தடவைகள் சாபமிட்டிருக்கிறார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு புதுக்கடையில் இலங்கையின் முதலாவது பாவனையாளர் நீதிமன்றத்தைத் திறந்துவைத்த பின்னர் உரையாற்றிய அவர் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்கள் படுகின்ற இன்னல்களைச் சுட்டிக்காட்டி, பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் நரகத்துக்குப் போவார்கள் என்று மீண்டும் சபித்ததைக் கண்டோம். அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த தனியார் மயமாக்கல் கொள்கை காரணமாகவே சமையல் எரிவாயு தொழில்துறை ஒரு சில நிறுவனங்களின் ஏகபோகத்தின் கீழ் வந்தது. அதன் விளைவாக மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. `எரிவாயுவின் விலையைக் குறை' என்று கோஷமெழுப்புவதனாலோ அல்லது சுவரொட்டி ஒட்டுவதனாலோ எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. அடிப்படையில் அமைப்பு முறையில்தான் தவறு இருக்கிறது என்றும் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டினார்.

பொது வைபவங்களில் கலந்துகொண்டு பேசுகையில் பிரதம நீதியரசர் தெரிவித்து வருகின்ற சர்ச்சைக்குரிய பல கருத்துக்கள் அரசியல்வாதிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. போருக்கு செலவிடப்படும் பெருந்தொகைப் பணம், அரசாங்க நிருவாகத்தில் தலை விரித்தாடுகின்ற ஊழல் மோசடிகள், அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற பேச்சுக்கள் என்று பல்வேறு வகைப்பட்ட பிரச்சினைகள் குறித்தெல்லாம் பிரதம நீதியரசர் கடுமையான கண்டனங்களை வெளியிட்டுவருகிறார். பாடசாலைக்கு முதலாம் ஆண்டில் அனுமதிக்கப்படும் பிள்ளைகளின் விவேகத்தை மதிப்பிடவேண்டிய அவசியம் குறித்து உயர் நீதிமன்றத்தினால் தெரிவிக்கப்பட்ட யோசனைக்கு அரசியல்வாதிகளிடமிருந்து கிளம்பிய எதிர்ப்புப் பற்றி சில மாதங்களுக்கு முன்னர் பொது வைபவமொன்றில் கருத்துத்தெரிவித்த அவர் `இன்று பாராளுமன்றம் செல்வதற்கு விவேகம் தேவையில்லை. ஆனால், பாடசாலைக்கு அனுமதிக்கப்படும் பிள்ளையின் விவேகம் நிச்சயம் கணக்கில் எடுக்கப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். பிரதம நீதியரசரின் இந்த நையாண்டி அரசியல்வாதிகளை நிச்சயம் ஆவேசமடைய வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சில பொலிஸ் அதிகாரிகள், சட்டத்தரணிகள், சுங்கத்திணைக்களம் மற்றும் மோட்டார் வாகனப் பதிவாளர் திணைக்களத்தின் அதிகாரிகள் படுமோசமான முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். இந்தப் பேர்வழிகள் அமைதியாக மரணத்தைத் தழுவப் போவதில்லை. நீண்ட காலம் துன்பங்களை அனுபவித்தே சாவைத் தழுவுவார்கள். அவர்களின் பிள்ளைகள் கூட விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் என்றும் ஒருதடவை பிரதம நீதியரசர் குறிப்பிட்டிருந்தார்.

பாவம் செய்பவர்கள் அழுந்தி அழுந்தித் தான் சாவார்கள் என்று வேறு வழியின்றி இயலாமையினதும் ஆத்திரத்தினதும் வெளிப்பாடாக சாதாரண மக்கள் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். நாட்டின் நீதி நிருவாகத்தின் அதியுயர் பதவியான பிரதம நீதியரசர் பதவியை வகிப்பவரே அவ்வாறு ஆவேசச்சாபம் போடுகிறாரென்றால் நாட்டு நிருவாகத்தில் எந்த அளவுக்கு ஊழல் மோசடிகளும் முறைகேடுகளும் புரையோடிப் போயிருக்கின்றன என்பதை புரிந்து கொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது. நீதித்துறையில் கூட ஊழல் மோசடி தலைவிரித்தாடுவதாக முன்னாள் ஜனாதிபதி திருமதி குமார துங்க ஒரு தடவை குற்றஞ்சாட்டியிருந்ததை பிரதம நீதியரசர் மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறோம். பிரதம நீதியரசரின் ஆவேசமும் சாபமும் அரச நிருவாகத்திற்குள் ஊழல் மோசடிகளையும் முறைகேடுகளையும் இல்லாதொழிப்பதில் அல்லது கட்டுப் படுத்துவதில் நீதித்துறைக்கு இருக்கின்ற இயலாமையின் பிரதிபலிப்பு என்று கருதுவதில் தவறு இருக்க முடியுமா? அதற்கான பதிலை அவரே தரவேண்டும். ஊழல் மோசடிக் காரர்களும் பொதுப் பணத்தைக் கொள்ளையடிப்பவர்களும் இறந்த பின்னர் நரகத்துக்குப் போவது வேறுவிடயம். அவர்கள் அப்பாவிப் பொது மக்களுக்கு இந்தப் பூமியிலேயே நரகத்தைக் காட்டுகிறார்கள் அல்லவா!

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com