தேர்தலில் எதிர்கட்சிக்கு வாக்களித்தால் அதற்கான விலையை செலுத்த வேண்டியிருக்கும் என்று வம்சாவளி இந்தியர்களை மலேசியாவின் ஆளும் கூட்டணி மிரட்டியுள்ளது.
மலேசியாவில் எதிர் வரும் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி மலேசியாவின் ஆளும் பாரிசான் தேசியக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.
தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிக்கு வாக்காளித்தால் இந்தியர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அந்த விளம்பரங்கள் மிரட்டும் தொனியில் வெளியிடப்பட்டுள்ளன.
மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் சம உரிமை கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், போராட்டக்காரர்கள் மீது அந்நாட்டு அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
எனவே, இந்தியர்கள் ஆளும் கூட்டணிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று கருதப்படுகிறது. நடைபெற உள்ள தேர்தலில் இந்திய வம்சாவளியினர் ஒரு பெரிய அரசியல் சக்தியாக கருதப்படுவதால் அவர்களுடைய ஆதரவைப் பெற ஆளும் கூட்டணி முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இந்தியர்களை எச்சரிக்கும் வகையில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த மிரட்டல்களுக்கெல்லாம் இந்திய வம்சாவளியினர் அஞ்ச மாட்டார்கள் என்று இந்து உரிமைகள் நடவடிக்கை குழுவினரான இந்து ராவ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் சம உரிமைக்கோரிப் போராட்டம் நடத்தும் இந்திய வம்சாவளியினருக்கு எதிராகவும் நடந்து கொள்ளும் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் சாமிவேலு தேர்தல் முடிவில் நம்பிக்கை இழந்து விட்டதையே இந்த விளம்பரங்கள் எடுத்துக் காட்டுவதாக இந்த்ராவ் ஒருங்கிணைப்பாளர் ஆர். தனேந்திரன் தெரிவித்துள்ளார்.