பெருந்தோட்ட ஆலய பரிபாலன சபைகளில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சு உறுதிப்படுத்துவது பெண்களுக்கான அதிகார பகிர்வை அர்த்தமுள்ளதாக்கும் முன்னோடி நடவடிக்கையாகும் என்று பிரிடோ நிறுவன வலையமைப்பு இணைப்பாளர் என். கருணாகரன் தெரிவித்துள்ளார்.
பிரிடோ பணியாளருக்காக பொகவந்தலாவை பிரிடோ பணிமனையில் நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியபோதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது;
"நாட்டின் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பும் அதே வேளையில் அவர்களுக்காக அதிகார பகிர்வை நியாயப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெண்கள் பட்டயம், பிரசவ கால விடுமுறை உட்பட கிடைக்க வேண்டிய சலுகைகள், பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள், விசேடமாக வீட்டு வன்முறைக்கெதிரான சட்டங்கள் என்பவை எல்லாம் பெருந்தோட்ட பகுதிகளில் முற்றிலும் அறியப்படாத விடயங்களாகவே இருக்கின்றன.
இந்தப் பின்னணியில் பெருந்தோட்ட பெண்களின் நிலையில் மாற்றங்களை ஏற்படத்துவதற்காக அறிவூட்டல் நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் பிரிடோ நிறுவனம் பெண்கள் சமூக அந்தஸ்தினை பெற்றுக்கொள்ளவும் அவர்களுடைய பங்களிப்புக்கு ஒரு பெறுமானத்தை வழங்கவும் வசதியாக எல்லா கீழ்மட்ட அதிகார அமைப்புக்களிலும் பெண்களுக்கு யாப்பு ரீதியாக 30 வீத ஒதுக்கீடு வழங்கப்படுதல் வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.
இதனை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னோடியாக முக்கியமான அதிகார அமைப்பான ஆலய பரிபாலன சபையில் பெண்கள் யாப்பு ரீதியாக நியமிக்கப்பட வேண்டும் என்ற பரப்புரையை முன்னெடுத்தது.
தற்போது பிரிடோ பணித்தளங்களில், பல ஆலய பரிபாலன சபைகளில் பெண்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெண்கள் ஆலய பரிபாலன சபைகளில் இடம்பெற்றுள்ள இடங்களில் ஆலய பரிபாலனம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவ்வாறான பரிபாலன சபைகள் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு இடமளிக்காத முறையில் சமூக முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பரிபாலனம் செய்வது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பெண்களின் சமூக அந்தஸ்தை அதிகரித்து அதிகார அமைப்புக்களில் அர்த்தமுள்ள முறையில் பங்களிப்பு செய்ய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
எனினும், பெண்கள் உரிமைகள் தொடர்பாக அதிக விழிப்புணர்வு பெற்ற பெருந்தோட்டங்களில் மட்டுமே இந்த முன்னேற்றத்தை காணமுடிகிறது. இந்த பின்னணியில் ஆலய பரிபாலன சபைகளுக்கு பெண்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்தை பரவலாக்குவதற்கும் ஆலய பரிபாலன சபைகளுக்கு ஒரு நிர்வாக ரீதியான அழுத்தத்தை கொடுப்பதற்காகவும் மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சு முன்னோடி நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.
ஆலய பரிபாலன சபைகளில் யாப்பு ரீதியாக குறிப்பிடப்பட்ட அளவு பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்ட கோவில்கள் மட்டுமே மாகாண சபையில் பதிவுக்காக ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது அவற்றில் பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது கட்டாய நிபந்தனையாக்கப்பட வேண்டும். மற்றைய சமூகங்களின் பெண்கள் பலதுறைகளில் முன்னேறி செல்லும் போது பெருந்தோட்ட பெண்களின் சமூக அந்தஸ்தை பெறுவதை உறுதிப்படுத்தும் முக்கியமான பங்களிப்பை பெருந்தோட்ட சமய அமைப்புகளும் அவற்றோடு தொடர்பான அரசியல் அதிகாரமுள்ள அமைப்புகளும் செய்ய வேண்டியது அவசியம் என்பதாலே பிரிடோ நிறுவனம் இந்த விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறது.
அதிகமான பெருந்தோட்ட மக்கள் வாழும் மத்திய மாகாணத்தில் மாகாண இந்து கலாசார அமைச்சர் எடுக்கும் இந்த நடவடிக்கை முழுநாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் முன்னோடி நடவடிக்கையாக அமையும் என்றார்.