* சபையில் ரவிகருணாநாயக்க கிண்டல்
அரிசி, தேங்காய், முட்டை ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பதற்கும் காரணம் உலக சந்தை நிலைவரமா என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வியெழுப்பினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல வினாக்களுக்கு விடையளிக்கும் நேரத்தின்போது கேள்வியெழுப்பிய அவர் மேலும் தெரிவித்ததாவது;
"இன்று பாணின் விலை 3.50 சதத்திலிருந்து 35 ரூபாவாக உயர்ந்துள்ள அதேவேளை பிரிமா மாவின் விலை 26 ரூபாவிலிருந்து 79 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதற்கு உலக சந்தையில் ஏற்பட்ட விலையதிகரிப்பென அரசாங்கம் காரணம் கூறுகின்றது.
அவ்வாறாயின் இன்று நாட்டில் தேங்காய், அரிசி, முட்டை மற்றும் மரக்கறி உட்பட பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்கு உலக சந்தையில் ஏற்பட்ட விலையதிகரிப்பா காரணமென நான் கேட்கின்றேன்.
இவற்றிற்கு காரணம் உலக சந்தையில் ஏற்பட்ட விலையதிகரிப்பல்ல. நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கமே காரணமாகும். அரசாங்கம் எதற்கெடுத்தாலும் உலகத்தையும் ஏனைய காரணிகளையும் காரணமாக காட்ட முற்படுகின்றது.
தேங்காய், முட்டை, அரிசி மற்றும் மரக்கறி என்பன எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில் இவற்றின் விலையும் உயர்ந்திருப்பதற்கு பணவீக்கமே காரணமாகும். இது குறித்து ஜே.வி.பி. மௌனம் காக்கின்றதற்குக் காரணம் அரசாங்கம் அக்கட்சியின் வாலில் தொங்கி உயிர் வாழ்வதற்கான ஒட்சிசனை பெறுவதே என்றார்.
ஜெயராஜ் பெர்ணான்டோ
இதற்கு ஆளும் கட்சி பிரதம கொரடாவான ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே பதிலளிக்கையில்;
எண்ணெய், மா, அரிசி விலைகள் அதிகரித்துள்ள நிலையில் உங்களால் மக்களை வீதியில் இறக்க முடிந்ததா? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது மக்கள் வைத்த நம்பிக்கையே இதற்கு காரணமாகும்.
நீங்கள் விலைவாசிதொடர்பில் சுவரொட்டிகளை ஒட்டி கூச்சலிட்டீர்கள். காதலர் தினத்தன்று போஸ்டரை ஒட்டினால் அதனை மக்கள் கண்டுகொள்வார்களா?
கிழக்கில் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ள அதேசமயம் 40% மான வாக்குகள் அங்குள்ள நிலையில் அங்கு நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.தே.க. போட்டியிடவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புலிகள் கூறியபடி தேர்தலில் பங்குகொள்ளாதது போல் ஐ.தே.க.வும் தேர்தலில் பங்குகொள்ளவில்லை" என்றார்.