ஊடகவியலாளர் எஸ்.ஆர்.எம்.எம்.முஹ்ஸியின் வீடு இனந்தெரியாத கோஷ்டியொன்றினால் தாக்கப்பட்டு சேதத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து முஸ்லிம் மீடியா போரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக முஸ்லிம் மீடியாபோரம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
ஊடகவியலாளர் எஸ்.ஆர்.எம்.எம்.முஹ்ஸியின் புத்தளம் வீட்டுக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் அத்துமீறி உட்புகுந்த காடையர் குப்பலொன்று வீட்டின் முற்புற ஜன்னல்களையெல்லாம் கோடரியால் உடைத்து நொறுக்கியுள்ள சம்பவம் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கெப் வாகனத்தில் சென்று தாக்குதல் நடத்திய இக் கும்பல் பிராந்தியத்தின் அதிகார அரசியல்வாதி ஒருவரின் அடியாட்கள் என்றே நம்பப்படுகிறது. இது சம்பந்தமாக முஹ்ஸி புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச் சம்பவத்தை முஸ்லிம் மீடியாபோரம் வன்மையாகக் கண்டிக்கிறது. நிராயுதபாணிகளான ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் இத் தாக்குதல்கள் சுதந்திர ஊடக செயற்பாட்டிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவும் கோழைத்தனமான செயலாகவும் மீடியாபோரம் இதனை நோக்குகிறது.
இதுபோன்ற சம்பவங்களையிட்டு அரசு இன்னும் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் நாடு எதேச்சதிகாரத்தின்பால் இட்டுச்செல்லப்படும் என்பதை சம்பந்தப்பட்டோர் உணர வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.