டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஏழு தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 2800 தொழிலாளர்கள் தோட்ட முகாமைத்துவத்திற்கு எதிராக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இவ்வேலைநிறுத்தம் தொடர்பாக பிரதிக் கல்வி அமைச்சர் மு. சச்சிதானந்தன் தெரிவித்ததாவது;
டஸ்கர், பொட்லிங் கம்பனிப் பொறுப்பில் இயங்கும் கோணக்கலை, கனவரல்லை, கந்தசேனை, பிங்காராவை, தென்னகோம், இந்தகலை, கிளனன் ஆகிய ஏழு தோட்டங்களில் மொத்தம் மூவாயிரம் தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றார்கள். இவர்களில் 2800 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
இக்கம்பனிக்கு 500 மில்லியன் ரூபா நிதி கிடைத்திருக்கின்றது. ஆனால், 100 மில்லியன் ரூபா நிதி மட்டுமே தோட்ட அபிவிருத்தி வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
மிகுதி 400 மில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்ததென தெரியாதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தோட்டத்தில் முறையான நிர்வாகமில்லையெனவும் தோட்டங்களுக்கான உரம் இடுவதில்லை, துப்புரவு செய்வதில்லை, இத்தோட்டத் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகள், நிலுவைகள் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான செயற்பாடுகளால் இத் தோட்ட மக்கள் தொடர்ந்து போராட்டம் நடாத்தியதால் இந்தத் தோட்டங்கள் நமுனுகுல பெருந்தோட்டத்திற்குள் எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தொழில் வேலைகளை நடாத்துவதற்கு ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், உரம் வாங்கும் நிறுவனத்திற்கு தோட்டம் நிதி வழங்கப்படாமையால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
300 இலட்சம் ரூபா நட்டத்தில் இத்தோட்டம் இயங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.