அவசர காலச் சட்டத்தை மேலுமொரு மாதத்திற்கு நீடிக்க 88 மேலதிக வாக்குகளால் சபை நேற்று புதன்கிழமை அங்கீகாரம் வழங்கியது.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தின் இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா எம்.பி. கோரியதற்கு அமைய பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக 102 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் வழங்கப்பட்டன.
அரசாங்கம் மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளான மலையக மக்கள் முன்னணி, ஜாதிக ஹெல உறுமய என்பனவற்றுடன் ஜே.வி.பி.யும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்தது.
இதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எவரும் வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்காததுடன், மேலக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசன் எம்.பி. நேற்று சபைக்கு சமுகமளித்திருக்கவில்லை.