* சபையில் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.
டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
அரசாங்கம் தேர்தலொன்றுக்காக ஆயுதக் குழுவொன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருப்பது இலங்கைக்கு பெரும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அவசர காலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே கிரியெல்ல எம்.பி. இவ்வாறு கூறினார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
"உலக வரலாற்றில் முதற் தடவையாக தேர்தலொன்றுக்காக அரசாங்கமொன்று ஆயுதக் குழுவொன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது. அது இலங்கையில் நடந்திருக்கிறது. அரசாங்கமும் பிள்ளையான் குழுவினரும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இதேநேரம், ஐ.தே.க. கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிட வேண்டுமெனில் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களையுமாறு நாம் கூறினோம். ஆயுதக் குழுக்களை பொலிஸாருக்கு கட்டுப்படுத்த முடியுமாவென்பது சந்தேகமே.
இதேநேரம், இன்று பொலிஸ் முறையாக செயற்பட தேசிய பொலிஸ் ஆணைக்குழு இல்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இவர்களினது கீழேயே பொலிஸ் இயங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தலொன்றை நடத்த ஆயுதக் குழுக்கள் தேவையில்லை.
ஆயுதக் குழுக்களை அமெரிக்கத் தூதுவர் மட்டும் பார்த்திருக்கிறார். தான் கிழக்கில் இருந்த போது ஆயுதமேந்திய குழுக்களைக் கண்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால், வேறு எவரும் காணவில்லை. குறிப்பாக அரசுக்கு அவ்வாறு எவரும் இருப்பதாகக் கண்ணில் கூட படவில்லை" என்றார்.