* சிறப்புரிமை மீறல் பிரச்சினை எழுப்பினார் கஜேந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வன்னிப் பகுதிக்கு சென்று வருவதனை தடுப்பதன் மூலம் அங்கு அரச படைகளால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளை மூடிமறைக்க அரசாங்கம் முற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம்சாட்டினார்.
ஓமந்தை, மதவாச்சி இராணுவ பொலிஸ் சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு படையினரால் தாம் இழிவாக நடத்தப்பட்டதாக பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை சிறப்புரிமை மீறல் பிரச்சினை எழுப்பிய அவர் மேலும் தெரிவித்ததாவது;
யாழ். தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிய நான் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக கிளிநொச்சியிலுள்ள எனது வீட்டிலிருந்து கொழும்பு வரும்வழியில் திங்கட்கிழமை அன்று ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியூடாக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்தபோது இராணுவத்தின் முதலாவது சோதனைச் சாவடியில் வைத்து எனது வாகனத்தின் கீழ்ப் பகுதி சோதனையிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அச்சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 250 மீற்றர் தூரத்தில் வைத்து வாகனத்தில் வந்தவர்களது அடையாள அட்டைகள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் முழுமையான உடற்சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், வாகனத்தில் இருந்து பொருட்கள் அனைத்தும் துருவித்துருவி சோதனையிடப்பட்டு வாகனத்தின் முன் ஆசனப் பகுதி, பின் ஆசனப்பகுதி, பொருட்கள் ஏற்றும்பகுதி என்பனவும் வாகனத்தின் கூரைப்பகுதியும் துருவித்துருவி சோதனையிடப்பட்டதுடன், வெளிப்பகுதியும் சோதனையிடப்பட்ட பின்னர் ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியை தாண்டி பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டேன்.
ஓமந்தையில் சோதனை நடவடிக்கைகளை பூர்த்தி செய்த பின்னர் கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த போது மதவாச்சி சோதனை நிலையத்தில் வழிமறித்த பொலிஸார் வாகனத்தை சோதனையிடும் பகுதிக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். அங்கு கொண்டு சென்ற போது வாகனத்தின் கீழ்ப்பகுதி சோதனையிடும் இடத்தில் வைத்து கீழ்ப்பகுதி சோதனையிடப்பட்டது. அதன்பின்னர் பொருட்கள் சோதனையிடும் பகுதிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள். அங்கு சென்றபோது எனது வாகனத்தில் தொடர்ந்து பயணம் செய்ய முடியாது என்றும் எனது வாகனத்தை மதவாச்சியை தாண்டிச் செல்ல அனுமதிக்க முடியாது என்றும் அதனை திருப்பி அனுப்பிவிட்டு பிறிதொரு வாகனத்தில் செல்லுமாறும் பொலிஸார் கூறினர்.
இவ்விடயம் பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதனை அடுத்து வாகனத்தை சோதனையிட்ட பின்னர் பயணம் செய்ய அனுமதிக்க முடியும் என்று கூறி சோதனையிடத் தொடங்கினர்.
ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்திலிருந்த பொருட்கள் அனைத்தையும் நன்கு துருவித்துருவி சோதனையிட்டபின் பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தர் வந்து மீண்டும் அதே பொருட்களை துருவித்துருவி சோதனையிட்டார். பின்னர் வேறொரு பொலிஸ் உத்தியோகத்தர் வெடிகுண்டு கண்டறியும் கருவி ஒன்றைக் கொண்டு வந்து வாகனத்தை சோதனையிட்டார்.
அதன் பின் ஒரு பொலிஸார் ஒரு மோப்பநாயை கொண்டுவந்து பொருட்கள் அனைத்தையும் மோப்பம் பிடிக்கச் செய்தார். பொலிஸாரின் இந்த நடவடிக்கையானது பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எம்மை மிகவும் இழிவு படுத்தவேண்டும் என்பதற்காகவும், அச்சுறுத்துவதற்காகவும் வேண்டுமென்று மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.
குறிப்பாக நாம் வன்னிப்பகுதிக்கு சென்றுவருவதனை தடுக்க வேண்டும். அதன் மூலம் அங்கு அரச படைகளாலும் விமானப் படையாலும் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினராலும் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை மூடி மறைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் அரசின் திட்டமிட்ட நடவடிக்கையாகவே நாம் கருதுகின்றோம். இது எமது சிறப்புரிமையை மீறும் செயற்பாடாகும். இது தொடர்பாக உரிய நடவடிக்கையை மேற்கொண்டு எமக்கெதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட அவமதிப்பு நடவடிக்கைகளையும் கெடுபிடிகளையும் நிறுத்த உதவும் வண்ணம் வேண்டுகின்றேன்.