கடந்த 25வருடமாக கொழும்பில் வசித்து வருபவரும், மூன்று பிள்ளைகளின் தந்தையுமான வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட குடும்பஸ்தர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாக தாயாரும், உறவினர்களும் மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், வாழ்க்கைத் தொழில் - தொழில் நுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான பெ. இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளனர்.
கார்திகேசு ஷ்ரீமயூரன் (43) என்பவரே கடந்த மாதம் 25 ஆம் திகதி பொரளையில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது கிராட்ண்பாஸ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தாயாரான கார்த்திகேசு திலகவதி புகார் செய்துள்ளார்.
தனது மகன் கடந்த 25 வருடங்கள் கொழும்பில் வசித்து வருவதாகவும் அவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும், மனைவி காலமாகிவிட்டதாகவும் தெரிவித்த தாயார் தனது மகன் மூச்சக்கரவண்டி செலுத்தியே குடும்பத்தை நிர்வாகித்து வந்ததாகவும், அவர் கைது செய்யப்பட்டிருப்பதானால் குடும்ப நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார் .
சம்பவ தினம் ஷ்ரீமயூரன் பொரளையில் தான் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த போதும் அவர் தற்போது கிராட்ண்பாஸ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருப்பதன் காரணத்தை அறிந்து கூறுமாறும் தாயார் கோரியுள்ளார்.
இரகசிய தகவலை அடுத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட ஷ்ரீமயூரன் தொடர்பாக விசாரணைகள் நடைபெறுவதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஷ்ரீ மயூரனின் விடுதலை தொடர்பாக உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் பிரதி அமைச்சர் தொடர்பு கொண்டுள்ளார்.