* எச்சரிக்கிறது ஜே.வி.பி
வடக்கின் முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , ஆனந்த சங்கரி , சித்தார்த்தன் ஆகியோர் ஏங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள ஜே.வி.பி. தனி ஆட்சியொன்றை அமைக்கப் போராடிய டக்ளஸுக்கும் தற்போதும் ஆயுதங்களை வைத்திருக்கும் புளொட் சித்தார்த்தனுக்கும் எப்படி முதலமைச்சர் பதவியை வழங்க முடியுமெனவும் கேள்வியெழுப்பியுள்ளது.
ஜே.வி.பி.யின் திஸ்ஸமஹாராம பிரதேச சபைத் தலைவர் எச்.எல்.விஜயசிறி தலைமையில் நடைபெற்ற 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்துக்கான எதிர்ப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க மேலும் கூறியதாவது;
வடக்கின் முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏங்கித்தவிக்கும் ஆனந்த சங்கரி, அமைச்சர் டக்ளஸ் , சித்தார்த்தன் ஆகியோர் சமஷ்டி முறையே சிறந்ததென்று கூறியதுடன் அதனை முன்னெடுத்துச் செல்ல முனைப்புடன் செயற்பட்டவர்கள் இவர்களில் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதன் மூலம் வேறொரு பிரிவினைவாத சிந்தனையும் கருத்துகளும் ஏற்படப் போகின்றன.
கடந்த காலத்தைச் சற்று பின்னோக்கிப் பார்த்தோமானால் நிலைமையின் விபரீதம் புரியும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேறொரு ஆட்சியை நிறுவுவதற்காக முனைந்த ஒருவர்.
சித்தார்த்தனின் புளொட் அமைப்பு இன்றும் கூட ஆயுதங்களை வைத்துள்ளார்கள். அவர்களின் முகாம்கள் வடக்கில் பல இடங்களிலும் இருக்கின்றன . இவ்வாறான நிலையில் வடக்கில் மாகாண சபையை நிறுவுவது தவறாகும்.
இந்த மாகாண சபை நிறுவப்பட்டால் ஆயுதம் வைத்துள்ளோரின் கரங்களை பலப்படுத்துவதாகவே அமைந்துவிடும்.
இன்றைய அரசாங்கம் வடக்கு, கிழக்கிற்கு வேறொரு ஆட்சியை வழங்க முயற்சிக்கின்றது. இதற்காகவே இந்த 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி சமஷ்டி முறையிலான அரசையும் நிருவாகத்தையும் வழங்கப் போகின்றது. இதனை எவ்வாறு அனுமதிக்க முடியும்?
பாராளுமன்றத்துடன் மோதக்கூடிய பலம் வாய்ந்த மாகாண சபை ஒன்றையே வடக்கில் நிறுவி சமஷ்டி முறையை அமுல்படுத்த அரசாங்கம் வழிவகுக்கப் போகின்றதா?
இன்று எமது பகைவன் இந்தியாவாகும். இந்திய, இலங்கை கலை கலாசாரங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்தாலும் இந்தியா, இலங்கைக்கு படைகளை அனுப்பி எமக்கு துரோகமிழைத்ததை எவ்வாறு மறக்க முடியும்?
இன்று நாடு முழுவதும் பாரிய பிரச்சினைகள் உள்ளன. அரச, தனியார் ஊழியர்கள் மாதாந்தம் தமக்குக் கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு எவ்வாறு வாழ்க்கையை கொண்டு செல்லலாம் என கவலையடைகின்றனர். எதை வாங்குவது எதைவிடுவது என்பதே பெரிய பிரச்சினையாகிவிட்டது.
இன்றைய அரசாங்கம் பலவீனமானது மட்டுமல்ல. பிரச்சினைகள் நிறைந்த அரசாங்கமாகும்.