வாழைச்சேனை கருங்காலிச் சோலை பகுதியில் கடந்த இரு நாட்களில் இரு பாடசாலை மாணவிகள் வெள்ளைவான்களில் வந்த ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
திருமணமான மற்றொரு பெண்ணை ஆயுதபாணிகள் கடத்திச் செல்ல முற்பட்டபோது அவர் கெஞ்சி, மன்றாடியதுடன் அயலவர்களின் உதவியுடன் அவர்களிடமிருந்து தப்பியுள்ளார்.
இந்தச் சம்பவங்கள் வாழைச்சேனை பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் கருங்காலிச்சோலையிலுள்ள இவரது வீட்டிற்கு வெள்ளை வானில் சென்ற ஆயுத பாணிகளே இவரைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.
பாசிக்குடாவைச் சேர்ந்த குணசுந்தரம் புஸ்பராணி (வயது 16) என்ற மாணவியே திங்கட்கிழமை இரவு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
புஸ்பராணியின் பெற்றோர் 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் காவு கொள்ளப்பட்டனர். அதன் பின்னர் தனது மூத்த சகோதரரின் பராமரிப்பில் இவர் தங்கியிருந்தார். கல்குடா நாமக்கல் வித்தியாலயத்தில் 11 ஆம் நிலையில் புஸ்பராணி படித்து வந்தார். இவ்வேளையிலேயே கடத்தப்பட்டார்.
இதேநேரம், அதே பாடசாலையைச் சேர்ந்த 11 ஆம் தரம் படித்து வந்த மாணவியான யோகநாதம் யசோதினி (வயது 16) என்பவர் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். யசோதினியின் தந்தை காலமாகிவிட்டார். தனது தாயாருடன் வசித்துவந்த நிலையில் யசோதினி கடத்தப்பட்டுள்ளார்.
இவ்விரு கடத்தல்கள் தொடர்பாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம், கருங்காலிச்சோலை பகுதியில் திருமணமான மற்றொரு பெண்ணை இந்த ஆயுதபாணிகள் வெள்ளை வானில் கடத்த முற்பட்டபோது அவர் அழுது, குழறி, கெஞ்சி மன்றாடியுள்ளார்.
இவ்வேளையில், அங்கு மக்கள் கூடவே ஆயுதபாணிகள் அவரை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவங்களால் வாழைச்சேனை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.