* அவசரகால நீடிப்பு பிரேரணையை சமர்ப்பித்து சபை முதல்வர் தகவல்
டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட்அன்ஸிர்
கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தி, 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சபை முதல்வர் நிமால் சிறிபால டி.சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் எமது நாட்டுக்கு சகல தரப்புகளினதும் ஒத்துழைப்பு அவசியமாகும். பொதுவான எதிரியை கண்டுபிடித்து, அவ்வெதிரியின் உபாயங்களை அடையாளம் காண்பதிலும் அரசாங்கம் பொதுமக்களுடன் இணைந்து செயலாற்றிவருகிறது.
புலிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பின்னடைவைக் கண்டுவருகின்றனர். புலிகளின் சர்வதேச கடத்தலுடன் தொடர்புடையவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பேரழிவைத்தரும் புலிகளின் தாக்குதல் திட்டங்களும் தடுக்கப்பட்டுள்ளன.
படையினருடனான மோதலில் காயமடைந்த புலிகளுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நோயாளிகள் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். புலிகள் தற்போது மதவழிபாட்டுத் தலங்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர்.
கர்ப்பிணித் தாய்மார் வேடத்திலும் புலிகள் தாக்குதலை மேற்கொள்ளலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாய்க்குலத்திற்கே அவமானம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
கடந்த ஒருமாதத்தில் மாத்திரம் 104 படையினர் கொல்லப்பட்டும், 820 பேர் காயமடைந்துமுள்ளனர். பொது மக்களில் 80 பேர் கொல்லப்பட்டு, 201 பேர் காயமடைந்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தி, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.