இந்துக்களால் சிவபெருமானை வழிபடும் முக்கியமான தினமான சிவராத்திரியில் இலங்கையருக்கு சமாதானம், மகிழ்ச்சி, சௌபாக்கியம் கிட்ட வேண்டுமெனப் பிரார்த்திப்பதாக பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார்.
மகா சிவராத்திரி தினத்தைமுன்னிட்டு பிரதமர் விடுத்திருக்கும் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இந்து பக்தர்களால் சிவபெருமானை வழிபாடு செய்யும் மிகவும் முக்கியமான அனுஷ்டானமாக "மகா சிவராத்திரி" தினம் அமைந்துள்ளது.
இந்நாளில் இந்து பக்தர்கள் இரவு முழுவதும் சிவபெருமானை வழிபட்டு பக்திப் பாடல்கள் பாடி, ஜாமப் பூஜைகளை செய்து வழிபட்டு வரும் பழக்கமானது முன்னர் இருந்தே இடம்பெற்று வருகின்றது. ஏனைய ஆண்டுகளில் போலன்றி இம்முறை வடக்கு, கிழக்கு இந்து பக்தர்களுக்கு சுதந்திரமாக "மகா சிவராத்திரி" தினத்தைக் கொண்டாடுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையானது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
விசேடமாக திருகோணமலை கோணேஸ்வரம், மன்னார் திருக்கேதீஸ்வரம், யாழ்ப்பாணம் காரைநகரில் ஈழத்து சிதம்பரம் போன்ற வடக்கு, கிழக்கு புராதன இந்துக் கோவில்களில் இம்முறை மகா சிவராத்திரி விழாவானது கடந்த வருடங்களை விடவும் மிகவும் விமர்சையாக கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதனை அறிய முடிந்தது. அது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
மதம், நெறிகள் என்பவற்றினூடாக மனிதனின் ஆன்மீக ரீதியான பண்புகள் விருத்தியடைகின்றன. ஆன்மீக ரீதியான பண்புகள் காணப்படாத மனித வாழ்க்கையானது மனிதத் தன்மையற்றதாகும். எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அந்த மதங்களின் மூலம் காட்டப்பட்டுள்ள வழிகாட்டல்கள் மனிதனை நல்வழிப்படுத்துவதற்கே தூண்டுகின்றன என்பதே எனது நம்பிக்கையாகும்.
இலங்கைவாழ் அனைத்து இந்து பக்தர்களுக்கும் இன்றைய நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அனைத்து இலங்கைவாழ் மக்களுக்கும் சமாதானம், மகிழ்ச்சி, சௌபாக்கியம் என்பன ஏற்பட வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.