புத்தளம் எழுவன்குளம் இராணுவ முகாம் மீது நேற்று புதன்கிழமை அதிகாலை தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தின் எல்லைப்புற பகுதியிலுள்ள எழுவன்குளம் முகாம் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
எனினும், ்எழுவன்குளம் முகாமுக்கு முன்பாகவுள்ள சிறிய முகாம் மீதே விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் முகாமுக்கோ படையினருக்கோ சேதமெதுவும் ஏற்படவில்லையென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
எனினும் இந்தத் தாக்குதலில் படையினர் சிலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்றுக் காலை இந்த முகாம் பகுதியில் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது பொறிவெடியில் சிக்கி இராணுவ சிப்பாயொருவர் காயமடைந்ததாகவும் படையினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த படையினர் பின்னர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அநுராதபுரம் பகுதியில் தாக்குதல் நடத்த எழுவன்குளத்தினூடாக புலிகள் செல்வதற்கு வாய்ப்புண்டு. இது குறித்துப் பொது மக்களும் ஏனைய தரப்புகளும் சுட்டிக்காட்டியதையடுத்தே எழுவன்குளம் பகுதியில் புதிதாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.