வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இம்முறை சிவராத்திரி தின இரவு நேர வழிபாடுகளில் கலந்துகொள்வதற்கு முந்நூறு பக்தர்களுக்கு மட்டுமே படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
எனினும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை எவரும் பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ளலாமென படையினர் தெரிவித்துள்ளனர்.
திருக்கேதீஸ்வரத்தில் இன்றைய சிவராத்திரி தின பூஜை வழிபாடுகள் தொடர்பாக தள்ளாடி இராணுவ முகாமில் நேற்றுக்காலை 10 மணி முதல் 11 மணி வரை உயர் மட்டச் சந்திப்பொன்று நடைபெற்றது.
இதில் மாவட்ட இராணுவத்தளபதி, சிரேஷ்ட படைஅதிகாரிகள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் என்.சி.குடாஹெட்டி, மாவட்ட அரச அதிபர் ஏ.நீக்கிலாஸ்பிள்ளை, திருக்கேதீஸ்வர திருப்பணிச் சபைச் செயலாளர் ஏ.திருநாவுக்கரசு, சபை பிரதித் தலைவர் எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது, தற்போது அந்தப் பகுதியில் நிலவும் பாதுகாப்புச் சூழ்நிலைகாரணமாக சிவராத்திரிதினமான இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை திருக்கேதீஸ்வரம் சென்று வர பக்தர்கள் அனுமதிக்கப்படுவரெனவும் மாலை 6 மணிக்குப் பின்னர் இரவு நேர பூஜைகளில் கலந்து கொள்ள 300 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுமெனவும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த 300 பேரது பெயர் விபரங்களும் நேற்று மாலைக்குள் படையினரிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிடவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியிலுள்ள திருக்கேதீஸ்வரம் சந்தியிலிருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தூரத்திலேயே திருக்கேதீஸ்வரம் ஆலயமுள்ளது. இந்தச் சந்தியிலிருந்து விஷேட பஸ்கள் மூலமே பக்தர்கள் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர், அதற்கு முன் இந்தச் சந்தியில் வைத்து அனைத்து பக்தர்களும் தீவிரசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
இந்தச் சந்தியிலிருந்து புறப்படும் பஸ் ஆலயத்திற்குச் சென்றே நிறுத்தப்படும். இடையில் எங்கும் நிறுத்தப்படமாட்டாது. எவரும் இடைவழியில் இறங்க முடியாது.
திருக்கேதீஸ்வரம் சந்தியிலிருந்து சைக்கிள்களிலோ, மோட்டார் சைக்கிளிலோ அல்லது நடந்து செல்லவோ எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆலயச் சுற்றாடலில் மட்டுமே பக்தர்கள் நடமாடலாம் அதற்கப்பால் நடமாட முடியாது.
மறுநாள் வெள்ளிக்கிழமை பாலாவி ஆற்றில் தீர்த்தமாட பக்தர்கள் அனுமதிக்கப்படுவர், ஆலயச் சுற்றாடலில் எந்தவொரு கடையும் அமைக்க அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் படையினர் தெரிவித்துள்ளனர்.