முன்னாள் பிரதி வர்த்தக அமைச்சர் ஜெயசுந்தர விஜயகோன் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு முதல் காணாமல் போயுள்ளதாக இவரது வீட்டு வேலையாள் நேற்று புதன்கிழமை காலை மொனராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நேற்று முன்தினமிரவு இவர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்ததாகவும் பின்னர் தொலைக்காட்சி நிறுத்தப்படாத நிலையில் நேற்றுக் காலை வரை வேலையாள் தேடிய போது இவரை எங்கும் காணவில்லை.
வீட்டிலும் வெளிப்புறங்களிலும் தேடிய போதும் இவரைக் காணாத வேலையாள், பின்னர் மொனராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து மொனராகலை பொலிஸார் இவரைத் தேடிவருகின்றனர். இவருக்கு என்ன நடந்ததெனத் தெரியவில்லை.
பொதுசன ஐக்கிய முன்னணி எம்.பி.யாகத் தெரிவு செய்யப்பட்ட இவர், பின்னர் 2001 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதுடன், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசில் பிரதி வர்த்தக அமைச்சராகவும் பதவி வகித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி கலைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இவர் கட்சி அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.