ரொஷான் நாகலிங்கம்
ஆயுதக் குழுக்களின் பாதிப்புகளில்லாத சூழ் நிலையை மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்குமாறு பவ்ரல் அமைப்பு தேர்தல் திணைக்களத்திடமும் அரசாங்கத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் 10 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிசபைத் தேர்தல் தொடர்பாக இரண்டாவது அறிக்கையை நேற்று புதன்கிழமை வெளியிட்ட நீதி, நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்பின் தலைவர் கிங்ஸிலி ரொட்றிக்கோ அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 6 அரசியல் கட்சிகளும், 22 சுயேட்சைக் குழுக்களும் 28 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், அவர்களுள் 101 பேரைத் தேர்ந்தெடுப்பதற்காக 21,70,471 வாக்காளர்கள் 285 வாக்களிப்பு நிலையங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி வாக்களிக்கவுள்ளனர்.
09 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் உரிய தபால் மூல வாக்குகளைப் பிரயோகிப்பதற்காக 1004 வாக்காளர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுள் 934 பேர் அதற்குத் தகுதி பெற்றிருந்தனர். அவர்கள் பெப்ரவரி மாதம் 21,22 ஆகிய இரு தினங்களில் 72 மத்திய நிலையங்களில் வாக்குகளை அளித்தனர் என்பதுடன், 21 ஆம் திகதி காத்தான்குடி தேர்தல் தொகுதியில் ஹர்த்தாலொன்று அனுஷ்டிக்கப்பட்டதன் காரணமாக சிறு தடங்கலொன்று ஏற்பட்டபோதிலும், இவ்விரு தினங்களிலும் 93 சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மிகவும் விறுவிறுப்பானதாக இல்லாது விடினும் சிறு சிறு குழுநிலைக் கலந்துரையாடல்கள், துண்டுப் பிரசுரங்களும் சுவரொட்டிகளும் மூலம் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் காண முடிந்தது.
ஆயுதந் தாங்கிய குழுக்கள் அந்தப் பிரதேசங்களில் இன்னும் இயங்கி வருவதன் காரணமாகவும் அமைதியான ஒரு தேர்தல் இடம்பெறுவதற்குத் தடங்கல்கள் ஏற்படலாம் என்ற நியாயமான ஐயம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. இத்தகைய சகல விடயங்களையும் கருத்திற் கொண்டு பவ்ரல் இயக்கம் 3 முக்கிய கோரிக்கைகளை நீதிமன்றத்தின் முன்னிலையில் முன்வைத்தது.
1.யாதேனும் வாக்களிப்பு நிலையமொன்றில் வாக்கு மோசடி அல்லது முறைகேடு இடம் பெறின், அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை எண்ணுவதை வெறுமையாக்கி மீண்டும் தேர்தலொன்றை நடாத்துவதற்கு தேர்தல் ஆணையாளரைப் பணிக்குமாறும்,
2. தேர்தல் காலத்துள் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் ஆயுதங்களை வைத்திருப்பதை அல்லது பயன்படுத்துவதைத் தடுக்குமாறும்,
3. வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் அரசாங்கத்தின் அல்லது அரச நிறுவனங்களின் சொத்துக்களைப் பயன்படுத்துமாயின், அதனைத் தடுப்பதற்கான செயன்முறைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கைகளை முன்வைத்தது.
பவ்ரல் இயக்கம் வேட்புமனு கோரல் ஆரம்பித்தவுடன் மேற்கொண்ட கண்காணிப்புகளை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை முன்வைக்கப்படுகின்றது. அத்துடன், குறிப்பாக அதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்களின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டது. தேர்தல் தினத்திலும் சர்வதேச கண்காணிப்புக் குழுக்களுக்காக உள்ளூர் கண்காணிப்பாளர்கள் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளை சக உள்ளூராட்சி மன்றங்களையும் உள்ளடக்கி நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தமது பிரதேசத்தின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்குள்ள உரிமையை நாம் ஏற்றுக்கொள்வதுடன், அதற்கு வாய்ப்புக் கிட்டும் இந்தத் தேர்தல் குறித்து பவ்ரல் இயக்கம் நன்நோக்கில் சிந்திக்கின்றது.
நீதியான ஒரு தேர்தலுக்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தேர்தல் திணைக்களம், அரசாங்கம் உள்ளிட்ட தேர்தல் செயன்முறை சார்ந்த சகலரையும் நாம் கோருகின்றோம். குறிப்பாக, ஆயுதந் தாங்காத வாக்காளர்களுக்கு ஆயுதந் தாங்கிய குழுக்களின் பாதிப்புகள் இன்றி தமது வாக்குகளைப் பிரயோகிப்பதற்கு அவசியமான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு நாம் கோருகின்றோம். அதேபோல், யாதேனும் வாக்களிப்பு நிலையமொன்றில் முறைகேடொன்று இடம்பெறின் அந்த நிலையத்தின் வாக்களிப்பை இரத்துச் செய்து, புதியதொரு தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் வேண்டுகிறோம்.