அண்மையில் வெளியாகியுள்ள தகவல்களுக்கேற்ப வில்பத்து தேசிய வனப் பிரதேசங்களில் ஆயுதம் தரித்த புலிகள் இயக்கத்தினர் பரவலாகத் தங்கியிருப்பதாகவும் இவ்வாறு 25 பேர் அடங்கிய புலிகள் இயக்கக் குழுவினர் தேசிய வனத்தின் பிரதான காட்டுப்பகுதிகளில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் நடமாடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவலைத் தொடர்ந்து அநுராதபுரம், இராணுவத் தலைமையகம் வில்பத்துப் பிரதேசத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளதாகவும் மேலும் காடுகளுக்குள் நடமாடும் புலிகள் இயக்கத்தினரைப் பிடிப்பதற்காக விசேட படையணிகளை வில்பத்து தேசிய வன எல்லைப்பகுதிகளுக்கு அனுப்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வில்பத்து காடுகளை அண்டிய கிராமப்பகுதிகளில் வாழும் மக்களும் மர வியாபாரிகளும் குறித்த காட்டுப்பிரதேசங்களில் சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் வேட்டையாடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதால் தற்போது புலிகளின் நடமாட்டம் பற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களின் பின்னர் பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் காடுகளுக்குள் பிரவேசிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது வில்பத்து வனப்பிரதேசத்தைச் சேர்ந்த விலச்சிய, குகுல்கட்டுவ, றனோறாவ பகுதிகளில் விசேட இராணுவக் காவல் பிரிவுகள் அமைக்கப்பட்டு இராணுவ உப அணிகள் நிலை கொண்டுள்ளன. இந்த அணியினர் வில்பத்து காட்டுப்பகுதிகளில் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த காட்டுப் பிரதேசங்களுக்குள் மரம்வெட்டுவதற்காகவும் வேட்டைக்காகவும் பிரவேசிக்கும் நபர்களையும் கைதுசெய்வர்.
இந்தப் பாதுகாப்பு நடவடிக்கையை அநுராதபுரம் கூட்டு நடவடிக்கை கட்டளைத்தளபதியின் உத்தரவின் பேரில் அநுராதபுரம், இராணுவத் தலைமையகம் எடுத்துள்ளது. மேலும், தலைமையகம் இதுபற்றி அறிவிக்கையில் குறித்து வில்பத்து விசேட பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் மட்டுமன்றி வனப்பாதுகாப்பு, தேசிய வனங்கள் பராமரிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களும் குறித்த வில்பத்து காடுகளுக்குள் பிரவேசிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வில்பத்து தேசிய வனப்பிரதேசம் முன்னரே தேசிய வனத் திணைக்களத்தால் மூடப்பட்டிருந்தபோதும் அப்பகுதிகளில் வேட்டைக்காகவும் மரம் வெட்டுவதற்காகவும் வேறு பிரதேசங்களிலிருந்து வேட்டைக்காரர்களும் மரவர்த்தகர்களும் பெருந்தொகையில் களவாகப் பிரவேசிக்கின்றனர். அத்துடன், இவர்களுக்கு கிராமங்களில் உள்ள ஊர்காவற் படையினரும் ஒத்தாசை செய்கின்றனர். இதனால், மர வியாபாரிகளும், வில்பத்து வனப்பகுதிகளிலும் பெருந்தொகையில் மரங்களையும் இறைச்சியையும் கடத்திச்சென்று காடுகளை அண்டியுள்ள கிராமங்களில் வாழும் வியாபாரிகள் மூலம் விற்றுவருகின்றனர். புலிகள் இயக்கத்தினரின் நடமாட்டம் காரணமாக காடுகளுக்குள் ஜீவனோபாயம் தேடிச்செல்லும் பொதுமக்களின் தொகை குறைந்துவிட்டாலும் இறைச்சி வியாபாரம் மர வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வெளியூர் நபர்களின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும், இவர்களுக்கும் வில்பத்து காடுகளில் நடமாடும் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
லங்காதீப: 04.03.2008