இந்திய வீரர்கள் குறித்து விமர்சித்த அவுஸ்திரேலிய ஊடகங்களை கடுமையாகச் சாடியுள்ளார் இந்திய அணிக் கப்டன் தோனி.
இது குறித்து கப்டன் தோனி கூறுகையில்;
அவுஸ்திரேலிய பத்திரிகைகள் தொடர்ந்து ஹர்பஜனை பற்றித்தான் எழுதின. நாங்கள் தாயகம் திரும்பிவிடுவோம். இனி எழுதுவதற்கு வேறு யாரையாவது அவர்கள் தேட வேண்டும். அவர்கள் பரபரப்பாக எழுதியதைப் பார்த்தால் அது ஹர்பஜனா அல்லது மைக்கேல் ஜாக்சனா என்று சந்தேகம் வந்தது. ஒரு வகையில் இது பயனுள்ளதாக இருந்தது.
சர்ச்சைகளால் அவருடைய மனஉறுதி அதிகரித்தது. நாங்கள் போன பின் எதைப் பற்றி எழுதுகிறார்கள் என்று ஆர்வமுடன் இன்ர நெற்ரில் தேடிப் பார்ப்பேன். இந்த வெற்றி கப்டனால் மட்டும் வந்ததல்ல. ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக விளையாடியதால் வந்த வெற்றி. பியுஷ் சாவ்லாவை இப்போட்டியில் விளையாட வைத்து அவுஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி தர நினைத்தோம். அவரும் நாங்கள் நினைத்ததை செய்து காட்டினார்.
உத்தப்பாவை 6 அல்லது 7 ஆவது வீரராகக் களமிறக்கி அவரை வீணடிக்க விரும்பவில்லை. அதனால் தான் ஆரம்பத்தில் இறக்கினோம். தொடர்ந்து விளையாடி வருவதால் ஓய்வெடுக்க நேரமில்லாமல் போய்விட்டது. நான் ரிலாக்சாக மோட்டார் சைக்கிள் ஓட்டி நீண்ட நாளாயிற்று. புத்துணர்ச்சி பெற ஒவ்வொருவருக்கும் ஓய்வு தேவையென்றார்.
இளமையிடம் பணிந்தோமென்கிறார் அவுஸ்திரேலிய அணியின் கப்டன் பொண்டிங்
எங்கள் அணியில் அதிக மாற்றங்கள் செய்யவில்லை. ஆனால், இந்திய அணி இளம் வீரர்களை நம்பி களத்தில் இறங்கியது. கங்குலி நீக்கப்பட்ட போது கூட நான் அதிர்ச்சியடைந்தேன். ஆனால், அவர்களின் முடிவு நல்ல பலனை தந்தது.
ஹோப்ஸ் கடைசி வரை போராடி பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்னுடைய போர்ம் கவலையளிப்பது உண்மை தான். இந்திய வீரர்கள் பிரமாதமாக விளையாடினார்கள். சச்சின் இரண்டு இறுதியாட்டத்திலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித், இஷாந்த், பிரவீண் போன்ற இளம் திறமைசாலிகளுடன் இந்திய அணி வலுவாக இருக்கிறது என்றார்.