அவுஸ்திரேலியாவில் நடந்த முக்கோண கிரிக்கெட் தொடரில் இரு இறுதிப்போட்டியிலும் முறையே 117 , 91 ஓட்டங்கள் குவித்த இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
இவர் 777 புள்ளிகளுடன் இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவரை விட 7 புள்ளிகள் குறைவாக உள்ள அவுஸ்திரேலிய கப்டன் பொண்டிங் 2 ஆவது இடத்திலிருக்கிறார்.
இந்தத் தொடரில் 300 ஓட்டங்களுக்கு மேல் குவித்தும் 20 பேரை ஆட்டமிழக்கச் செய்தும் அசத்திய இந்திய விக்கெட் கீப்பரும் கப்டனுமான தோனி 10 ஆவது இடத்துக்கு வந்திருக்கிறார்.
ஒரு நாள் போட்டி அணிகள் தரவரிசையில் இந்தியா 113 புள்ளிகளுடன் 3 இடங்கள் முன்னேறி 4 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 3 ஆவது இடத்திலுள்ள நியூசிலாந்தும் அதே புள்ளிகளுடன் தான் உள்ளது. ஆனால், டெசிமல் புள்ளிக் கணக்கீட்டில் இந்தியாவை விட முந்துகிறது.
130 புள்ளிகளுடனிருந்த அவுஸ்திரேலியா தோல்வியின் மூலம் 127 புள்ளிகளுக்குக் குறைந்திருக்கிறது. தென்னாபிரிக்காவும் அதே புள்ளிகளுடன் இருந்தாலும் டெசிமல் புள்ளிக் கணக்கீட்டில் அவுஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்திலிருக்கிறது.