Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
இந்திய அணிக்கு இன்று பிரமாண்டமான வரவேற்பு பத்து கோடி ரூபா ரொக்கப்பரிசும் வழங்கப்படும்
[06 - March - 2008] [Font Size - A - A - A]
முக்கோணத் தொடரில் சாம்பியன் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு ஜாக்பாட் பரிசு காத்திருப்பதுடன் டில்லியில் இன்று பிரமாண்ட வெற்றி விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அணிக்கு ரொக்கப் பரிசாக 10 கோடி ரூபா வழங்கப்படுமென பி.சி.சி.ஐ. தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

இது குறித்து கிரிக்கெட் சபைத் தலைமை அதிகாரி ரத்னாகர் ஷெட்டி கூறுகையில்;

"இன்று காலை 11 மணியளவில் இந்திய அணி மும்பை வருகிறது. வீரர்கள் விசேட விமானம் மூலமாக டில்லி செல்கின்றனர். டில்லியில் பிற்பகல் 3 மணியளவில் நடக்கும் விழாவில் அணிக்கு 10 கோடி ரூபா பரிசு வழங்கப்படும்" என்றார்.

*அவுஸ்திரேலியாவின் சைமண்ட்ஸ் இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். 10 ஆவது ஓவரின் போது திடீரென ஆடையில்லாத ரசிகர் ஒருவர் மைதானத்தில் அடாவடியாக புகுந்தார். அப்போது ஆடிக் கொண்டிருந்த சைமண்ட்ஸ் ஆத்திரத்தில், அந்த ரசிகரை இடித்து கீழே தள்ளினார். தடாலென விழுந்த இவரை பாதுகாப்பு படையினர் வெளியேற்றினர். ஐ.சி.சி. நடத்தை விதிமுறை 4.2 இன் கீழ் எதிரணி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அல்லது ரசிகர் ஒருவரை உடல் ரீதியாக தாக்குவது குற்றம். இதற்கு 5 டெஸ்ட் அல்லது 10 ஒரு நாள் போட்டி முதல் ஆயுள் தடை வரை விதிக்கலாம். சைமண்ட்ஸ் செயல் பற்றி போட்டி நடுவர் முறைப்படி புகார் செய்தால் தடையில் இருந்து தப்புவது கடினம்.

*அவுஸ்திரேலிய மண்ணில் தோற்கும் போது கப்டன் தலைக்கு தான் ஆபத்து. இதையடுத்து பொண்டிங்கிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முக்கோணத் தொடரில் இங்கிலாந்திடம் கிண்ணத்தை கோட்டைவிட்டார். இம்முறை இந்தியாவிடமும் தோல்வியடைந்ததால், கப்டன் பதவியை தானாகவே ராஜிநாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

*தோல்விச் சோகத்துடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக விடைபெற்றார் அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட். ஏற்கனவே, டெஸ்டிலிருந்து ஓய்வுபெற்ற இவர் ஒருநாள் போட்டிக்கும் குட் பை சொன்னார். நேற்று முன்தினம் இரண்டு ஓட்டங்களுக்கு வெளியேறி ஏமாற்றமளித்தார்.

*முக்கோணத் தொடரில் அதிக ஓட்டம் எடுத்த வீரர் என்ற பெருமை பெறுகிறார் இந்தியாவின் காம்பிர். இவர் 10 போட்டிகளில் 2 சதம், 1 அரைச்சதம் உட்பட 440 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சச்சின் ஒரு சதம் உட்பட 399 ஓட்டங்களை எடுத்து இரண்டாமிடத்தில் உள்ளார். அவுஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கில்கிறிஸ்ட் 322 ஓட்டம் (10 போட்டி) எடுத்துள்ளார்.

*முக்கோணத் தொடரில் அபாரமாக ஆடிய சச்சின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சச்சின் 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததன் மூலம் அதிக முறை (17 முறை) 90 களில் ஆட்டமிழந்த வீரராகிறார்.

*`ருவென்ரி -20' உலகக் கிண்ணத்தில் வென்று சாதித்த தோனி தலைமையிலான அணி, உலகச் சாம்பியன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியுள்ளது.

*அவுஸ்திரேலிய மண்ணில் 23 ஆண்டுக்குப் பின் இந்திய அணி ஒரு நாள் தொடரில் வென்றுள்ளது. இதற்கு முன் 1985 இல் நடந்த உலக சாம்பியன் சிப் போட்டியில் கிண்ணத்தை வென்றது. கடந்த 30 ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவில் நடந்த முக்கோணத் தொடரில் முதல் முறையாக கிண்ணத்தை வென்றுள்ளது.

*முக்கோணத் தொடர் ஒன்றும் உலகக் கிண்ணம் அல்ல. ஆனாலும், இந்தியாவின் வெற்றி பற்றி இவ்வளவு பெரியளவில் பேசப்படுவதற்கு இம்முறை அரங்கேறிய சர்ச்சைகள் தான் முக்கிய காரணம். ஒவ்வொரு போட்டியின் போதும் அவுஸ்திரேலிய வீரர்கள் வீராப்பு பேசினார்கள். வீணாக இந்திய அணியை தூண்டிப் பார்த்தார்கள். சிட்னி டெஸ்ட் போட்டியின் போது நடுவர் ஸ்ரீவ் பக்னர், பென்சன் உள்ளிட்டோர் இந்தியாவுக்கு எதிராக தீர்ப்பளித்தனர். பின்னர் ஹர்பஜன் சைமண்ட்ஸை பார்த்து குரங்கு எனக் கூறியதாக பிரச்சினை கிளப்பினர். இஷாந்த் சர்மா - சைமண்ட்ஸ் இடையே மோதல் வெடித்தது. ஹைடன் தன் பங்குக்கு ஹர்பஜனை `பயனற்ற களைப்பயிர்' என்று விமர்சித்தார்.

*கடந்த காலங்களில் இந்திய அணி தோல்வியடைந்து வந்ததால், இது போன்ற சர்ச்சைகள் பெரிதாகவில்லை. ஆனால், இம்முறை ஏட்டிக்கு போட்டியாக அவுஸ்திரேலியாவின் ஒவ்வொரு அசைவுக்கும் சரியான பதிலடி கொடுத்தது. பெர்த் டெஸ்டில் வென்ற கையோடு முக்கோணத் தொடரிலும் அசத்தியது.

*காம்பிர், இஷாந்த், பிரவீன் போன்ற இளம் வீரர்களோடு சச்சினும் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்த, அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திக் காட்டியுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் தொடர் தோல்வி, 2003 உலகக் கிண்ணத் தோல்விக்கு பழி தீர்த்துள்ளது. அடுத்த உலகின் `நம்பர் -1 அணி' என்ற இலக்கை நோக்கி விரைவாக முன்னேறுகிறது. அவுஸ்திரேலியா இன்னொரு மேற்கிந்தியாவாக உருவெடுக்கும் அபாயத்தில் உள்ளது.

முக்கோணத் தொடரை வென்றுள்ள இந்திய அணிக்கு ஜனாதிபதி பிரதிபா பட்டீல் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Email this page Your Opinion Print this page
இந்திய அணிக்கு இன்று பிரமாண்டமான வரவேற்பு பத்து கோடி ரூபா ரொக்கப்பரிசும் வழங்கப்படும்
ஒரு நாள் தரவரிசையில் மீண்டும் சச்சின் முதலிடத்தை பிடித்தார்
சைமண்ட்ஸ் மீண்டும் சர்ச்சையில் ரசிகரை தோள்மூட்டால் இடித்து வீழ்த்தினார்
அவுஸ்திரேலிய ஊடகங்கள் மீது கப்டன் தோனி கடும் பாய்ச்சல்
83 இல் உலகக் கிண்ண வெற்றிக்குப் பின்னர் மகத்தான வெற்றியென்கிறார் டெண்டுல்கர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com