-என்.ராமதுரை-
நிலை இழந்த உளவு செயற்கைக்கோள் ஒன்றை அமெரிக்கக் கடற்படையினர் ஏவுகணை ஒன்றைச் செலுத்தி நடுவானிலேயே அழித்துள்ளனர். பூமியை நோக்கி இறங்கிக் கொண்டிருந்த அந்த அமெரிக்க செயற்கைக்கோள் எங்கே தங்கள் மீது வந்து விழுமோ என்று பல நாடுகளிலும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு நிம்மதி. அமெரிக்காவுக்கு அதைவிட நிம்மதி. ஆனால், உலகில் சில நாடுகளின் அரசுகள் நிம்மதி இழந்துள்ளன.
முதலில் அமெரிக்காவுக்கு ஏன் நிம்மதி என்பதைக் கவனிப்போம். இந்த செயற்கைகோள் மட்டும் ஏதேனும் ஒரு நாட்டில் விழுந்து மக்களில் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அமெரிக்காவுக்கு எதிராகக் கூக்குரல் கிளம்பியிருக்கும். இதை அமெரிக்கா நிச்சயம் விரும்பாது.
செயற்கைக் கோள்கள் பூமியில் வந்து விழுவது என்பது புதிய விஷயமே அல்ல. அவ்வப்போது செயற்கைக்கோள்கள் பூமியில் பெரும்பாலும் கடலில் வந்து விழுந்த வண்ணம் உள்ளன. இவற்றில் பலவும் எடை குறைந்தவை.
இவை பூமியின் மேற்பரப்பை நோக்கி வேகமாக இறங்கும்போது காற்று மண்டலத்தில் நுழையும். அப்போது காற்று மண்டல உராய்வு காரணமாக அவை கடுமையான அளவுக்கு சூடேறித் தீப்பிடிக்கும். அப்போது அவை அநேகமாக முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிடும்.
அபூர்வமாக செயற்கைக்கோளின் சில பகுதிகள் தீப்பிடிக்காமல் முழுதாகத் தரையில் வந்து விழுவதும் உண்டு. அமெரிக்காவின் யு.எஸ். 193 என்ற உளவு செயற்கைக்கோளின் எடை ஒரு தகவலின்படி 9 தொன். எனவே, இதன் பகுதிகள் பலவும் எரிந்து நாசமாகிவிடாமல் கீழே வந்து விழ வாய்ப்பு இருந்தது. அப்பகுதிகள் ஒரு வேளை ரஷ்யாவில் அல்லது சீனாவில் வந்து விழுமேயானால் அமெரிக்க உளவு செயற்கைக்கோளின் தொழில்நுட்ப ரகசியங்கள் பிறர் கைக்குப் போய்விடலாம்.
இப்படியான நிலைமை ஏற்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை. யார் கையிலும் கிடைத்து விடாதபடி இந்த உளவு செயற்கைக்கோளை நடுவானிலேயே அழித்துள்ளது பற்றி அமெரிக்கா நிச்சயம் நிம்மதி அடைந்திருக்கும்.
எனினும், செயற்கைக்கோள் நடுவானில் அழிக்கப்பட்டது குறித்து சில நாடுகள் கவலை கொள்ளக்காரணங்கள் உள்ளன. செயற்கைக்கோள் ஒன்றை வெற்றிகரமாக நடுவானில் அழிக்க அமெரிக்காவுக்கு உள்ள திறன் நிரூபணமாகி விட்ட நிலையில் எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் பிற நாடுகளின் சாதாரண செயற்கைக்கோள்களை அல்லது உளவு செயற்கைக்கோள்களை அமெரிக்கா திட்டமிட்டுத் தாக்கி அழிக்க முற்படாது என்பது என்ன நிச்சயம்? இதுதான் பிற நாடுகளுக்கு இப்போது ஏற்பட்டுள்ள கவலையாகும். ஆகவே தான் செயற்கைக்கோள் தாக்கி அழிக்கப்பட்டது பற்றி விபரம் அளிக்குமாறு அமெரிக்காவை சீனா கோரியது.
இப்படிக் கேட்க சீனாவுக்கு அருகதை உண்டா என கேள்வி எழுப்பினால் அது தவறாகாது. சீனா 2007 ஜனவரியில் இதேபோல தனது செயற்கைக்கோள் ஒன்றைத் தாக்கி அழித்தது. அப்போதும் இதேபோல பல நாடுகளில் கவலை தோன்றியது. குறிப்பாக இந்தியாவில் இது பற்றி இயல்பாகக் கவலை எழுந்தது. இந்தியாவிடமும் இதுபோன்ற திறன் உள்ளதாக அப்போது அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சீனா தனது செயற்கைக்கோளைத் தாக்கி அழித்த போது அமெரிக்காவும் மற்றும் பல நாடுகளும் அதற்குக் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. விண்வெளி பற்றிய 1967 ஆம் ஆண்டு சர்வதேச சட்டப்படி சீனா தனது அச்செயல் பற்றி பிற நாடுகளை முன்கூட்டிக் கலந்தாலோசிக்கவில்லை என்று சீனா மீது குற்றம்சாட்டப்பட்டது.
சீனா அவ்விதம் தனது செயற்கைக்கோளை நடுவானில் அழித்த போது ஏற்பட்ட சிதறல்கள் விண்வெளியில் இருந்தபடி பூமியைச் சுற்றுகின்ற இதர நாடுகளின் செயற்கைக்கோள்களையும் அத்துடன் சுமார் 300 கிலோமீற்றர் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தையும் பாதிக்கின்ற ஆபத்து கணக்கில் கொள்ளப்பட்டதா என்று அப்போது அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் கேள்வி எழுப்பின.
ஒரு நாட்டின் செயற்கைக்கோளின் விளைவாக யாருக்கேனும் அல்லது ஒருவரின் சொத்துக்குப் பாதகம் ஏற்பட்டால் விண்வெளி பற்றிய சர்வதேச சட்டப்படி அந்த நாடு நஷ்டஈடு வழங்கியாக வேண்டும். விண்வெளியில் உள்ள நிலைமைகளை கெடுக்கக் கூடாது என்றும் அந்தச் சட்டம் கூறுகிறது. விண்வெளியில் அணு ஆயுதங்களை அல்லது பெரு நாசம் ஏற்படுத்துகிற ஆயுதங்களை ஈடுபடுத்தலாகாது என்றும் அந்தச் சட்டம் கூறுகிறது. ஆனால், உளவு பார்ப்பதற்கு விண்வெளியைப் பயன்படுத்தலாகாது என்று அந்தச் சட்டம் கூறவில்லை.
ஒரு நாட்டின் மீது பிற நாட்டின் வேவு விமானம் பறந்தால் அதைச் சுட்டு வீழ்த்த ஒரு நாட்டுக்கு உரிமை உள்ளது. ஆனால், பிற நாடுகளின் செயற்கைக்கோளைச் சுட்டு வீழ்த்த எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை.
ஆரம்ப கட்டத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் தான் நிறைய எண்ணிக்கையில் உளவு செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தின. இப்போது பிரான்ஸ், பிரிட்டன், இந்தியா, சீனா, ஜப்பான், இஸ்ரேல் முதலான நாடுகளும் உளவு செயற்கைக் கோள்களைப் பெற்றுள்ளன. இந்த வகை செயற்கைக்கோள்கள் பூமியை வடக்கிலிருந்து தெற்காகச் சுற்றுபவை. சுமார் 300 முதல் 600 கிலோ மீற்றர் உயரத்தில் அமைந்தபடி இவை பூமியைச் சுற்றுகின்றன. இவை வானிலிருந்து படம்பிடித்து அப்படங்களை அந்தந்த நாடுகளின் தலைமைக் கேந்திரங்களுக்கு அனுப்புகின்றன.
பகலாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி மேக மூட்டம் இருந்தாலும் சரி இவை படங்களை எடுக்கும் திறன் படைத்தவை. அமெரிக்காவிடம் உள்ள சில வகை உளவு செயற்கைக் கோள்களால் கீழே நடக்கிற தொலைபேசி பேச்சுகளையும் மின்னஞ்சல்களையும் ஒட்டுக் கேட்க முடியும்.
நில வள ஆய்வு செயற்கைக்கோள்கள் என்ற பெயரில் உளவு செயற்கைக் கோள்களை உயரே செலுத்துவதும் உண்டு. இவ்வித செயற்கைக்கோள்கள் நிலவள ஆய்வுப் பணிக்குப் பயன்படுத்தப்படும் அதேநேரத்தில் உளவு பார்க்கும் நோக்கில் படங்களையும் எடுக்கும். இந்தியாவின் ஐ.ஆர்.எஸ். செயற்கைக்கோள்கள் இந்த வகையைச் சேர்ந்தவை. இவை அல்லாமல் இராணுவ உபயோகத்துக்கென இந்தியா தனியே உளவு செயற்கைக் கோளைப் பெற்றுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களும் செயற்கைக் கோள்களை உயரே செலுத்திப் படங்களை எடுக்கின்றன. வானிலிருந்து துல்லியமாகப் படங்களை எடுக்கும் திறனில் பல நாடுகளின் உளவு செயற்கைக்கோள்கள் இடையே நிறையவே வேறுபாடுகள் உள்ளன.
அமெரிக்கத் தனியார் நிறுவனங்களில் ஐகோனாஸ் மற்றும் குவிக்பேர்ட் செயற்கைக் கோள்கள் 60 சென்டிமீற்றருக்கு மேல் நீளம் கொண்ட எதையும் மக உயரத்திலிருந்து துல்லியமாகப் படம் எடுக்கக் கூடியவை. இந்தியாவின் குறிப்பிட்ட செயற்கைக் கோளும் இதே அளவு திறன் கொண்டது. செயற்கைக்கோள் மூலம் மிகத் தெளிவாகப் படம் எடுப்பதில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடம்வகிக்கிறது.
பிற நாடுகளின் படை நடமாட்டம், விமானத்தளம், ஏவுகணைத்தளம், போர்க்கப்பல் நடமாட்டம் என எதையும் செயற்கைக்கோள் மூலம் படம் எடுக்க முடியும். ஒரு நாடு நிலத்துக்கு அடியில் அணுகுண்டு வெடிக்க ஆயத்தம் செய்தால் செயற்கைக்கோள் மூலமான படங்கள் மூலம் அதை முன்கூட்டி அறிந்து கொள்ள முடியும். உளவு செயற்கைக் கோள்களின் பார்வையிலிருந்து தப்பாத எதுவுமே இல்லை எனலாம்.
ஆனால், 1998 இல் அமெரிக்க உளவு செயற்கைக் கோள்கள் இந்தியாவை உன்னிப்பாகக் கவனித்து வந்த போதிலும் இந்தியா அந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க செயற்கைக் கோள்களுக்குத் தென்படாத வகையில் ஓர் உத்தியைக் கையாண்டு நிலத்துக்கு அடியில் அணுகுண்டுகளை வெற்றிகரமாக வெடித்து உலகை வியப்பில் ஆழ்த்தியது.
பொதுவில் எல்லா செயற்கைக் கோள்களிலும் அதன் பாதையை மாற்றிக் குறிப்பிட்ட கோணத்தில் பூமியை நோக்கி இறங்கச் செய்வதற்கான ஏற்பாடு இருக்கும். அப்போது அது இயற்கையாகத் தீப்பிடித்து அழிந்துவிடும்.
ஆனால், அமெரிக்காவின் மேற்படி உளவு செயற்கைக் கோளில் அந்த ஏற்பாடு செயலற்றுப் போய்விட்டது. ஆகவே, அதை அழிக்க ஏவுகணை செலுத்தப்பட்டது. சுமார் 247 கிலோ மீற்றர் உயரத்தில் அதுவும் மணிக்கு சுமார் 28 ஆயிரம் கிலோ மீற்றர் வேகத்தில் பறந்து கொண்டிருந்த செயற்கைக்கோளைத் தாக்கியழிப்பது என்பது எளிதான விடயமல்ல.
எனினும், இந்த ஏவுகணை செயற்கைக்கோளை அழிப்பதற்கென உருவாக்கப்பட்டது அல்ல. அணுகுண்டுகளைச் சுமந்தபடி தங்கள் நாட்டைத் தாக்க வருகின்ற எதிரி நாட்டின் ஏவுகணைகளை அவை நெருங்கு முன்னரே எதிர்கொண்டு சென்று தாக்கி அழிக்கவல்ல எதிர் ஏவுகணைகளை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. அவ்வித ஏவுகணையில் தகுந்த மாறுதல்களைச் செய்து செயலில் ஈடுபடுத்தி சோதித்துப் பார்க்க மேற்படி செயற்கைக்கோள் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. அதுதான் உண்மை.
இந்தியாவும் இவ்வித எதிர் ஏவுகணைகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. இதுவரையிலான சோதனைகள் வெற்றியாகவே அமைந்துள்ளன.
நன்றி: தினமணி