Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
`திரிபுசெய்யப்பட்ட பொய்யான தகவல்களை எப்போதுமே பிற நாடுகளுக்கு வழங்கிக் கொண்டிருக்க முடியாது உண்மை எப்படியும் தெரிய வரும்'
[07 - March - 2008] [Font Size - A - A - A]
கலாநிதி குமார் ரூபசிங்கவின் சமாதானத்திற்கான ஒரு குரல் என்னும் நூலின் வெளியீட்டு விழா கடந்த திங்கட்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடை பெற்றபோது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய ஆசியுரை

போர்களினால் தான் சமாதானத்தின் அருமை எமக்குத் தெரிய வருகிறது. ஆனால், நாங்கள் சகவாழ்வில் ஈடுபட்டால் சமாதானம் தானாகவே பரிணமிக்கும். மேல் நீதிமன்றில் என்னுடன் வேலை செய்த ஒரு ஊழியர் தமிழர்களை வெறுப்பவராக இருந்தார். நான் மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்றதும் என்னை உதாசீனஞ் செய்தார். ஒரு நாள் அவரைக் கூப்பிட்டு அவரின் கடமைகளை முறையாக ஆற்ற வேண்டியதன் அவசியத்தை அவருக்கு எடுத்துரைத்தேன்.

அவர் தலைக்குள் அது புகவில்லை. பின்னர் அவருக்கு ஒரு பிரச்சினை வந்தபோது அதைத் தீர்த்து வைத்தேன். இந்த மனுஷன் தமிழன் என்றாலும் பரவாயில்லை என்று எண்ணத் தொடங்கினார். சில காலத்தின் பின் இராணுவப் போர் வீரரான அவரின் சகோதரர் மன்னாரில் குண்டடிபட்டு இறந்ததாகச் செய்தி வந்தது. அவர் உடலை கொழும்புக்குக் கொண்டு வருவதற்கு என்னால் ஆன உதவிகளைச் செய்தேன். ஈமச் சடங்குகள் முடிந்ததும் என்னை வந்து என் அலுவலக அறையில் சந்தித்த அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

அப்பொழுது தான் அவருக்கு நான் நாசூக்காகக் கூறினேன். "உம் சகோதரர் போல் எத்தனை சகோதர சகோதரிகள் போரினால் வடக்கிலும் கிழக்கிலும் மரணிக்கின்றார்கள் தெரியுமா? போர் எமக்கு அவசியமா? உம் சகோதரரின் உயிரை எவ்வளவு விலை கொடுத்துக் கூடத் திரும்ப வாங்க முடியுமா? " என்றேன். அன்றிலிருந்து அவர் தமிழர்கள் மீது வெறுப்புக் கொள்வதைத் தவிர்த்துக் கொண்டார். சமாதானம் அவசியம் என்று கூறும் பல கூட்டங்களில் அவர் பங்கு பற்றியதாகவும் அறிந்தேன். போரில் எமக்குக் கிட்டிய சொந்தங்களின் உயிர் பறிபோனால்த்தான் எமக்கு சமாதானத்தின் அருமை புரிகிறது. அவருக்கு உதவி செய்து சகவாழ்வில் நான் ஈடுபட்டதால்த் தான் அவர் மனதில் வெறுப்பு நீங்கத் தொடங்கியது என்று நம்புகிறேன்.

என் பதவியின் அதிகாரத்தைப் பாவித்து தொடக்கத்தில் இருந்து அவரைக் கடிந்து கொண்டு வந்திருந்தேனானால் சகோதரரின் இறப்பின் பின் அவருக்குத் தமிழர்கள் மீதும் என் மீதும் துவேஷம் இன்னும் அதிகமாயிருக்கும்.

மூவாயிரம் வருடங்களுக்கு முன் இந்து இரிஷிகளும், இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன் புத்தபகவானும் , இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் யேசு கிறிஸ்து நாதரும் வெறுப்பை வெறுப்பாலும் வன்மத்தை வன்மத்தாலும் ஒழிக்க முடியாது என்று கூறினார்கள். அந்த உபதேசமானது இன்றும் பொருந்தும் என்பதை நாங்கள் மறத்தலாகாது.

சமாதானத்திற்குக் குரல் கொடுப்பதில் ஊடகங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இன்று உலகம் மதங்களினாலும் மொழிகளினாலும் பொருளாதார அசமநிலையினாலும் வெவ்வேறு வாழ்க்கை முறைச் சித்தாந்தங்களினாலும் வேறுபட்டு இருப்பினும் அடிப்படையில் இருவிதமான மனிதர்களே இந்த உலகில் இருந்து வருகின்றனர் என்று கூறலாம்.

ஒரு சாரார் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் நாடும் மனிதர்கள். மற்றையவர் விரோதத்தையும் வேற்றுமையையும் வளர்க்கும் மனிதர்கள். இந்த ஒற்றுமை, வேற்றுமை என்ற சொற்களை நாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒற்றுமை என்றால் எல்லோரும் என்னோடு சேருங்கள். என் மொழியைக் கற்றுவிடுங்கள். என் மதத்திற்கு மாறுங்கள். அதிகப்படியான உங்கள் செல்வத்தை எனக்குத் தாருங்கள். என் வாழ்க்கை முறையை நீங்கள் பின்பற்றுங்கள் என்பதல்ல. மனிதர்கள் என்ற முறையில் மனதால் ஒன்றுபடுவதே ஒற்றுமை. உங்கள் மொழி, உங்கள் மதம், உங்கள் தனித்துவத்தை நான் ஏற்று , எனக்கிருக்கும் அதே மொழிப்பற்று, மதப்பற்று, கலாசாரப்பற்று உங்களுக்கும் இருப்பதை நான் வரவேற்கின்றேன் என்று மகிழ்வடைவதே ஒற்றுமை. சுருங்கக் கூறுவதாகில் சக வாழ்வில் ஈடுபடுதலே ஒற்றுமையின் அறிகுறி.

சுதந்திரம் பெற முன்னர் பிறந்த ஒருவர் என்ற முறையில் இப்பேர்பட்ட சகவாழ்வு சாத்தியமென்றே நான் கூறுவேன். சிங்களம் மட்டும் சட்டம் எமக்குள் பிரிவினைகளைக் கொண்டு வர முன்னர் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் ஆகியோர் மிக அந்நியோன்யமாக நெருங்கிப் பழகி வந்தோம். பாராளுமன்ற பெரும்பான்மையைப் பாவித்து ஒரு சாரார் மற்றையவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த எத்தனித்ததாலேயே பிரிவினை எண்ணங்கள் பரிணமித்தன.

வேற்றுமை எனும் போது மற்றவர்களின் உரித்துகளை , ஆசைகளை , அபிலாஷைகளை எண்ணங்களைப் புரிந்து கொள்ளத் தலைப்படாமல் அவர்கள் வேறு நாங்கள் வேறு என்ற மனோபாவம் கொண்டிருப்பதே அது. ஆகவே சமுதாயத்தின் மனச்சாட்சியின் ஒரு அங்கமான ஊடகங்கள் ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்கின்றேன். மனித ஐக்கியத்திற்குக் குரல் கொடுக்க வேண்டும் என்கின்றேன். வேற்றுமையிலும் ஒற்றுமையைக் காண விழைய வேண்டும் என்கின்றேன்.மனித ஐக்கியத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் போருக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்கின்றேன். மக்களின் இன்னல்களைத் துடைப்பதே எங்கள் தலையாய கடமை என்று ஊடக மக்கள் நினைக்க வேண்டும் என்கின்றேன். சில ஊடக உரிமையாளர்கள் தமது சுய நலத்திற்காகச் சில விஷம காரியங்களை எதிர்பார்க்கக் கூடும். ஆனால் அவர்களை எங்கள் பக்கம் ஈர்க்க நாம் முயலவேண்டும். அதைத் தான் துவேஷம் நிறைந்த மேல்நீதிமன்ற அலுவலருடன் நான் செய்து வெற்றியும் கண்டேன். சமாதானத்தை நாடி நாங்கள் ெசயற்படுவது ஒரு உயர்ந்த குறிக்கோள், உயர்ந்த இலட்சியம் என்பதை நாங்கள் மறக்கக் கூடாது. சமாதானத்திற்காகப் போராடுபவர்கள் ஒன்றுபடுங் காலம் இப்பொழுது கனிந்துள்ளது. மேலாதிக்கம் செலுத்த விழைவோர் பிரிவினைக்கு வித்திடுவார்கள். புரிந்துணர்வை நாடுபவர்கள் ஐக்கியத்தை வரவழைப்பாளர்கள். இதை ஊடக உரிமையாளர்களுந் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு நாம் தெரியப்படுத்த வேண்டும்.

தமிழ்ப் பத்திரிகைகளில் சிங்களப் பத்திரிகைகள் கூறுவனவற்றை மொழிப்பெயர்ந்துப் போடும் பழக்கத்தை தினக்குரல் தான் முதல் முதலில் செய்தது என்று நம்புகின்றேன். இது தினக்குரல் ஆசிரியர் திரு.தனபாலசிங்கம் அவர்களின் உயர் சிந்தனைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. இதுவரை இதைச் செய்யாவிடில் சிங்களப் பத்திரிகைகளும் இதைச் செய்யவேண்டும். இதன் ஊடாக தமிழ் வாசகர்களின் சிந்தனைகளை எந்த விதமான செய்திகள் பதப்படுத்துகின்றன என்று சிங்கள மக்கள் அறிந்து கொள்ள அது ஏதுவாய் அமையும். பொதுவாகத் தமிழ், சிங்களப் பத்திரிகைகள் போரைப் பொறுத்த வரையில் வித்தியாசமான கருத்துகளையே வழங்கி வருகின்றன. ஆனால் சமூகவியலாளர்களான குமார் ரூபசிங்க போன்றவர்களின் கட்டுரைகள் இந்த நிலையைப் போக்கி இரு தரப்பாருக்குங் கிட்டத் தட்ட ஒரே விதமான செய்திகளைப் பரிமாறுவதால்த் தான் இன்றைய இந்த வெளியீட்டு வைபவம் மிக்க முக்கியத்துவத்தை அடைகிறது.

மனித நேயம், மனிதாபிமானம், மனித உரிமைகள் பற்றிய அறிவு போன்றவை மனதில் நிறைந்தால் எந்தப் பிரச்சினையையுந் தீர்த்துவிடலாம். மாறாக வெறுப்பு, துவேஷம், சந்தேகம், பொறாமை போன்ற எண்ணங்கள் மனிதில் நுழைந்தால் சமாதானம் எட்டாப் பழமாக ஆகிவிடும். ஒரு உண்மைக் கதையை உங்களுடன் இத்தருணத்தில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். பாரம்பரிய வளர்ப்பில் வந்தவர் அந்த அம்மையார். அவர் மகன் அவருக்குத் தெரியாமல் ஒரு சிங்களப் பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொண்டார். மகனையும் மருமகளையும் பார்க்க மறுத்தார் தாயார். அவரின் மகள் மனிதாபிமானமுள்ள ஒருவர். தன் சகேதாரர் அப்படி ஏதும் ஒரு பெரிய குற்றத்தைப் புரியவில்லையே என்று தாயாரிடம் கூறி திருமணம் முடிந்து விட்டதால் இருவரையும் ஏற்கவேண்டும் என்று நச்சரித்துக் கொண்டிருந்தார். ஒரு பிறந்தநாள் விழாவில் இருதரப்பாருங் சந்திக்க வேண்டி வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மாமியார் - மருமகள் உறவு வலுப்பெற்று வந்தது. சில காலத்தின் பின் மகன், மருமகளுடன் தாயார் கழிங்குங் காலம் மகளின் வீட்டில் கழிக்குங் காலத்தையும் மிஞ்சியது. கோபம், சந்தேகம், துவேஷம் மனதை விட்டு அகன்றவுடன் மருமகளை மாமியார் ஒரு அழகிய மனிதராகவே கண்டார். சிங்களவராகக் காணவில்லை. ஊடகங்கள் புரிந்துணர்வையும் ஐக்கியத்தையும் வளர்க்குங் கருவிகளாக மாறவேண்டும். சமாதானம் வந்து விட்டால் உணர்ச்சி தரும் செய்திகளைப் பரிமாற முடியாது போய்விடுமோ என்று ஊடக நிர்வாகங்கள் எண்ணக் கூடும். ஆனால் சமாதானத்தில் ஏற்படப்போகும் ஊடக நன்மைகளைப் பார்த்துத் தாங்கள் அன்பின் கருவியாக மாறியதை நினைத்து, மனங்குளிர்வார்கள் என்றே நம்புகிறேன்.

நாங்கள் இன்று புதியதொரு உலகத்தில் நடமாடுகின்றோம். தகவல் தொழில்நுட்பத்தின் வழிவந்த மின் உபகரணங்கள் ஊடாக பல செய்திகள் கணநிமிடத்தினுள் உலகமெங்கும் வியாபிக்கின்றன. எவ்வளவுதான் நாங்கள் உண்மைகளை மறைக்கப் பிரயத்தனங்கள் மேற்கொண்டாலும் உண்மை வெளிவந்தே தீரும். ஆகவே, பத்திரிகைகள் திரிக்கப்பட்ட செய்திகளை வெளியிடாமல் இருப்பது அப் பத்திரிகைகளுக்கே நன்மை பயக்கும். உண்மையை அறிதல், உண்மையைப் பயமில்லாமல் வெளிப்படுத்தல் ஆகியவை பத்திரிகையாளர்களின் கடமை. உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் அவர்களின் கருத்துரைகளை வெளியிடுவது அவர்கள் உரித்து. ஆனால், எங்கள் கருத்துரைகளை உண்மை போல் திரித்துக் கூறக் கூடாது. முன்னர் வைத்தியத் தொழில், ஆசிரியத் தொழில், சட்டத் தொழில் ஆகியன தான் மேம்பட்ட தொழில்களாகக் கணிக்கப்பட்டன. அவற்றிற்கென ஒரு மேலான தர்மம் இருப்பதாகக் கூறப்பட்டது. அந்தத் தர்மந்தான் நிறைவான மனித சேவை. உடல், உள்ள வருத்தத்தைப் போக்குகின்றான் வைத்தியன். கல்வியால் மாணவ உள்ளங்களை வளமாக்குகின்றான் ஆசிரியன். மனித வாழ்க்கையின் சிக்கல்களைக் களைந்து கொடுக்கின்றான் சட்டத்தரணி. இவர்களுடன் இன்று பத்திரிகையாளனும் மாண்பு மிகுதொழில் ஒன்றினைச் செய்வதாக நாங்கள் கணிக்க வேண்டும். இலங்கையில் தம் தொழிலைச் சரியாகச் செய்யப்போய், மக்களுக்கு நன்மை செய்யப்போய், மனித சேவையில் ஈடுபடப்போய், குற்றவாளிகளை அடையாளம் காணப்போய் கூடிய உயிர்த் தியாகங்களை செய்தவர்கள் பத்திரிகையாளர்களே. அதை நாங்கள் மறக்கக் கூடாது. ஆனால், எமது பத்திரிகா தர்மத்துக்குப் பங்கம் விளைவிக்காது எதிர்ப்புக்களைத் துச்சமென மதித்து முன்னேறுவது பத்திரிகையாளர் கடமை. அந்தக் கடமை நெறியில் ஈடுபடும் பத்திரிகையாளர்கள் அனைவருந் தாமும் ஒரு மாண்பு மிகு தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. இன்று இந்த நாட்டில் குற்றவாளிகள் பற்றி முறையிட்டால் முறையீட்டாளர்களை அரசாங்கம் சாடுகிறது. குற்றவாளிகளைக் குத்துக்கல்லாட்டம் விட்டுவிடுகிறது.

(தொடரும்)

Email this page Your Opinion Print this page
`திரிபுசெய்யப்பட்ட பொய்யான தகவல்களை எப்போதுமே பிற நாடுகளுக்கு வழங்கிக் கொண்டிருக்க முடியாது உண்மை எப்படியும் தெரிய வரும்'
ஸ்ரீ முக்தீஸ்வர அம்மா பகவானின் 59 ஆவது ஜென்ம தினம்
விண்ணில் செயற்கை கோள் அழிப்பு ஏன்?
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com