Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
நகரில் வாழும் உலகம்
[07 - March - 2008] [Font Size - A - A - A]
இன்று உலகெங்கும் நகரமயவாழ்க்கை தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் அண்மையில் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில் தரப்பட்டிருக்கும் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், உலக சனத்தொகை தீர்க்கமான அளவுக்கு நகரமயமாக மாறியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. சுமார் 330 கோடி மக்கள் நகரப்பகுதிகளில் வாழ்கிறார்கள். 2030 ஆம் ஆண்டளவில் இத்தொகை சுமார் 500 கோடியாக அதிகரிக்கும். இது உலக சனத்தொகையில் அரைவாசிக்கும் கூடுதலானதாக இருக்கும். நகரங்களிலேயே உலகம் வாழப்போகிறது என்றுகூடச் சொல்லலாம். நகரமயமாதலே பிரதான வாழ்க்கைப் போக்காக மாறிவரும் வேளையில், மனித குலம் எதிர்நோக்கப் போகின்ற சவால்களும் அச்சந் தருபவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஐ.நா.சனத்தொகை நிதியத்தின் மதிப்பீட்டின்படி 2030 அளவில் உலக சனத்தொகையில் 60 சதவீதமானோர் நகரப்பகுதிகளில் வாழப்போகிறார்கள். அத்தகைய துரிதநகரமயமாதல் வறுமை, வேலையில்லாத்திண்டாட்டம் மற்றும் குற்றச்செயல்களில் இருந்து போதைப் பொருளுக்கு அடிமையாகுதல் வரை எண்ணற்ற சவால்களைத் தோற்றுவிக்கப்போகிறது. ஏற்கெனவே உலகில் உள்ள நகரவாசிகளில் மூன்றில் ஒருபங்கிற்கும் அதிகமானோர் சேரிகளிலேயே வாழ்ந்து வருகிறார்கள் என்று கணிப்பிடப்பட்டிருக்கிறது. அடுத்த கால் நூற்றாண்டில் சனத்தொகைப் பெருக்கத்தில் 75 சதவீதம் நகரங்களிலேயே இடம் பெறப்போகிறது. அபிவிருத்தி குன்றிய நாடுகளின் நகரங்களே இவற்றில் பெருவாரியானவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விரிவடைந்துவரும் நகரங்களில் சுற்றாடலியல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் குறைவானவையாகவும் முறையான திட்டமிடலுக்கு உட்படாதவையாகவும் இருப்பதாக ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. உண்மையில் நகரவளர்ச்சியின் சுற்றாடலியல் பாதக விளைவுகள் பாரதூரமானவை. நகரங்கள் இயற்கை வளங்களை வகைதொகையின்றிப் பயன்படுத்துபவையாகவும் கழிவுப் பொருட்களை உற்பத்தி செய்பவையாகவும் இருக்கின்றன. உலகளாவிய காலநிலை மாற்றத்தை விளைவிக்கும் பசுமை இல்லத் தாக்க வாயுக்களை நகரங்களே பெருமளவில் உற்பத்திசெய்கின்றன. நகர முகாமைத்துவத்தின் சகல அம்சங்களிலும் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டமிடலுக்கு முன்னுரிமை கொடுக்கப்படாவிட்டால் நகரங்களில் குவியும் மக்களின் போக்கானது 2015 ஆம் ஆண்டளவில் உலகின் வறுமையை அரைவாசியாகக் குறைக்கும் ஐ.நா.வின் மிலேனியம் அபிவிருத்தி இலக்கை அடைவது சாத்தியமற்றதாகிவிடும் என்று அஞ்சப்படுகிறது. நகர மயமாதலினால் ஏற்படுகின்ற சமூக, பொருளாதார மற்றும் சுற்றாடலியல் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு உருப்படியான திட்டங்களை வகுக்க வேண்டியது அரசாங்கங்களின் கடமையாகும்.

நகரமயமாதலின் தவிர்க்க முடியாத விளைவாக, சேரிகளின் பெருக்கம் இருக்கிறது. அபிவிருத்தி குன்றிய மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் இந்த நிலைவரம் மிகவும் பாரதூரமானதாக இருக்கிறது. தனவந்த நாடுகளில் நகரமயமாதல் பெருமளவுக்கு பொருளாதார வளர்ச்சியுடன் ஒத்திசைவானதாக இருந்து வருகிறது. வறிய நாடுகளில் நிலைமை அவ்வாறாக இல்லை. குறிப்பாக ஆபிரிக்காவை எடுத்துக் கொண்டால், நகரப்புற சனத்தொகையில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் சேரிப்பகுதிகளிலேயே வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். உலகில் குறைந்த பட்சம் 100 கோடி பேர் அல்லது மனித குலத்தின் ஆறில் ஒரு பங்கினர் சேரிப்புறங்களிலேயே வாழ்கிறார்கள்.இது பிரதானமாக ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயேயாகும். இத்தொகை 2020 அளவில் இருமடங்காகக் கூடும் என்று ஐ.நா. சுற்றாடல்திட்டம் கூறுகிறது.

சேரிவாழ்க்கை என்பதன் அர்த்தம் தற்காலிகமான குடியிருப்புகள், பாதுகாப்பான தூயநீர் இல்லாமை படுமோசமான சுகாதார நிலைமை, சிறுவர்களுக்குத் தீராத தொற்று நோய் அவலம், வளரும் சமுதாயம் பண்புச் சீரழிவுக்கு எளிதில் ஆளாகக் கூடிய வாழ்க்கை நிலைமைகள் என்பதேயாகும். ஒழுங்கான திட்டமிடல் இல்லாத நகரமயமாதல் சேரிகளின் பெருக்கத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. தீவிரமடையும் நகரமயமாதலினால் ஏற்படக் கூடிய பாதக விளைவுகளை இயன்றவரை குறைப்பதற்கு சுகாதாரக் கட்டமைப்புகள் தொடக்கம் போக்குவரத்து சேவைகள் வரை சகல அம்சங்களிலும் சிறப்பான திட்டமிடலும் முதலீடும் அவசியமாகும். நகரமயமாதல் தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால், அது ஒரு சாதகமான அம்சமாக அல்லது சுற்றாடலியல் மற்றும் சமூக அனர்த்தமாக மாறுமா இல்லையா என்பது முறையான திட்டங்களைத் துரிதமாக வகுக்கக் கூடிய அரசாங்கங்களின் ஆற்றலிலேயே முற்று முழுதாகத் தங்கியிருக்கிறது.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com