* சீனப் பிரதமர் வென் ஜியாபோ
சீனப் பாராளுமன்றத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அந்நாட்டுப் பிரதமர் வென் ஜியாபோ அங்கு அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.
சீனாவில் இவ்வருட முற்பகுதியில் 7.1 வீதமாக அதிகரித்திருக்கும் பணவீக்கம் மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பொருளாதார வளர்ச்சியும் மந்தமான நிலையில் இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலை அதிகரிப்பானது புரிந்துணர்வின்மைக்கும் சமூகக் குழப்ப நிலைக்கும் வழிவகுக்குமென அரசியல் வாதிகள் அஞ்சுவதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
பன்றி இறைச்சி மற்றும் முட்டை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் அதிகரிப்பிற்கு விநியோக முறைமைகளில் ஏற்பட்ட பிரச்சினைகளும் ஒரு காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இவ் வருட முற்பகுதியில் சீனாவில் நிலவிய வழக்கத்திற்கு மாறான பனிவீழ்ச்சி காலநிலையால் பயிர்ச்செய்கைகள் சேதமடைந்தமையும் விலை அதிகரிப்பிற்கான காரணமென கருதப்படுகிறது.
இவ் வருடத்திற்கான தேசிய மக்கள் காங்கிரஸின் பொதுக் கூட்டத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கு பிரதமர் ஜியாபோ மேலும் உரையாற்றுகையில்;
தாராளமயமின்றி நாட்டின் வளர்ச்சி இல்லை. ஊழலற்ற நேர்மையான அரசு நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். பொருளாதார சீர்திருத்தம் மற்றும் அந்நிய முதலீடுகளை ஊக்குவிப்பது நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியம். ஜனநாயகத்தையும் சந்தைப் பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும்.
அதிகாரிகளின் நடத்தையை சீர்திருத்த வேண்டும். நிர்வாகத்திலுள்ள ஊழலை எதிர்த்துப் போராட வேண்டும். அத்துடன், பொருளாதாரத்தின் வேளாண்மையை பலப்படுத்த வேண்டும். வேளாண்மைக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கிராமப்புற வருவாயை அதிகரிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மருத்துவம், கல்வி நலத்திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படும். சமூக நல்லிணக்கத்தையும் சமுதாய சமத்துவத்தையும் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.