இளவயதினரின் எண்ணிக்கை குறைவடைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கவலையடைந்துள்ள சீனா நீண்டகாலமாக பின்பற்றி வரும் ஒரு குழந்தை திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது எதிர்காலத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துமெனக் கருதியே சீனா இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
உலகிலேயே, அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. பெருகி வரும் மக்கள் தொகையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பல்வேறு முயற்சிகளை சீனா மேற்கொண்டது. `ஒரு குடும்பம் - ஒரு குழந்தை' என்ற திட்டத்தை கொண்டு வந்தது. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால், கருக்கலைப்பு உள்ளிட்ட பல்வேறு தண்டனைகளை அறிவித்தது. இந்த அதிரடி நடவடிக்கையால், பிறப்பு சதவீதம் பெருமளவு வீழ்ச்சி அடைந்தது. வயதானோர் எண்ணிக்கை அதிகரித்து, இளைஞர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. இது, சீன அரசுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில், இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால், அந்நாடுகள், பல்வேறு எதிர் விளைவுகளை சந்தித்து வருகின்றன. எதிர்காலத்தில், உற்பத்தி சார்ந்த பணிகளில், ஈடுபடுவதற்கும் மற்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில், பணியாற்றுவதற்கும், 30 வயது முதல் 50 வயதுடையவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை, `சோசியல் டைம்பாம்' என அந்நாடுகள் கூறி வருகின்றன. அதாவது சமுதாய அளவில் பெரிய அளவில் வெடிக்கும் வெடிகுண்டு போன்ற அபாயம் என்கின்றனர். ஏனெனில், இம்மாதிரி உற்பத்திப் பணிகளுக்கு சொந்த நாட்டில் ஆள் இல்லாமல், அந்நிய நாடுகளை நம்பும் போது எழும் பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும். இதேபோன்ற நிலை தங்களுக்கும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதால், சீனா அச்சம் அடைந்துள்ளது.
இதனால், குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தில், நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வரும், `ஒரு குடும்பம் - ஒரு குழந்தை' திட்டத்தை கைவிடுவது பற்றி ஆலோசித்து வருகிறது. பிறப்பு சதவீதத்தை அதிகரிப்பது என அரசு முடிவு செய்துள்ளது.
இதுபற்றி தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப நல திட்ட ஆணைய துணை அமைச்சர் ஜவோ பேஜி கூறுகையில்;
தற்போதுள்ள குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தில் மாற்றம் கொண்டு வரதிட்டமிட்டுள்ளோம். இதை எப்போது செயற்படுத்துவது, எப்படி செயற்படுத்துவது என்பது பற்றி தற்போது பதில் அளிக்க முடியாது. மக்கள் தொகை குறித்து, ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஒரு குடும்பத்திற்கு குறைந்தது இரண்டு குழந்தைகள் வேண்டும் என, 30 வயதிற்கு உட்பட்டோரில், 60 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மிகச் சிலர் மட்டுமே, மூன்று குழந்தைகள் அவசியம் என கருத்து தெரிவித்துள்ளனர்' என்றார். கடந்த 1970 களில் சீனாவில், ஒரு பெண், தனது வாழ்நாளில் சராசரியாக பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை 5.8 ஆக இருந்தது. தற்போது 1.8 ஆக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.