* அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
பாகிஸ்தானில் புதிதாக அமைக்கப்படும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி முஷாரப் நம்பிக்கை வாக்குக் கோர வேண்டுமென பாகிஸ்தான் மக்கள் கட்சி , பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ், அவாமி தேசிய கட்சி ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பாகிஸ்தானில் பெப்ரவரி 18 ஆம் திகதி நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றன. முஷாரப் ஆதரவு பெற்ற பி.எம்.எல்- க்யூ கட்சி பல இடங்களில் தோல்வியைச் சந்தித்தது.
பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மற்றும் அவாமி தேசியக் கட்சி ஆகியவை இணைந்து பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்கவிருக்கின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அல்- சர்தாரி மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவர்கள் சௌத்ரி நிஷர் அலிகான் , இஷார் தர், கவஜா முகமது ஆசிப் ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.
பெனாசிர் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிறுவனர் சுல்பிகர் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டதற்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடையே முஷாரப் நம்பிக்கை வாக்குக்கோர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.
புதிதாக அமையவிருக்கும் அரசில் தங்களது கட்சி பங்கேற்காது என்றும் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்போம் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.