தமது வாகனம், வீடு என்பன கும்பலொன்றினால் சேதமாக்கப்பட்டதை கண்டித்தும், சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்யுமாறு கோரியும் செவ்வாய்க்கிழமை மாலை புத்தளத்தில் சத்தியாக்கிரக போராட்டமொன்று இடம்பெற்றது.
புத்தளம் தபாலக சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களான வட மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், புத்தளம் நகரசபை உறுப்பினர் எஸ்.ஆர்.எம். முஹ்ளி ஆகியோருடன், புத்தளம் நகரசபை பிரதி தலைவர் ஏ.ஓ. அலிக்கான், ஆராச்சிக்கட்டு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம். நசார், மீனவ சங்க தலைவர் ஏ.எல். சாஜஹான் உட்பட பலரும் இணைந்திருந்தனர்.
தபாலக சுற்றுவட்டத்தில் தரையில் அமர்ந்து ஆரம்பித்த சாத்வீக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும், அமைப்புக்களின் பிரதிநிதிகளும் வருகைத் தந்திருந்தனர்.
சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பதாகைகளை ஏந்தியும், கோஷங்களையும் முழங்கினர்.
இதனையடுத்து, அங்கு வந்த பொலிஸார் சந்தேக நபர்களை தாம் கைது செய்வதாக அளித்த உறுதிப்பாட்டையடுத்து, சத்தியாக்கிரக போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.