-எம்.ஏ.எம். நிலாம்-
கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக முன்னாள் அமைச்சரும் முன்னாள் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான யூ.எல்.எம். பாருக்கை நியமிப்பது தொடர்பாக கட்சி உயர் மட்டம் ஆராய்ந்து வருகிறது.
கம்பஹா மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக இருந்த கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய அரசு பக்கம் தாவியதையடுத்து அவர் மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
அதன் பின்னர் மாவட்ட அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்படாத நிலை தொடர்ந்தது.
கட்சியின் கம்பஹா மாவட்ட கிளை அமைப்புகளின் கோரிக்கைகளைக் கவனத்திலெடுத்த ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் உயர்பீடம் விரைவில் மாவட்ட அமைப்பாளரொருவரை நியமிக்க ஆராய்ந்து வருகிறது.
கட்சியின் சிரேஷ்ட தரத்தினர் பலரும் முன்னாள் அமைச்சர் யூ.எல்.எம். பாருக்கை நியமிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர். இது தொடர்பில் விண்ணப்பமொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் கூடவிருக்கும் கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில் இந்த நியமனம் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்கப்படுமெனவும் பெரும்பாலும் யூ.எல்.எம். பாருக் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க தெரிவித்தார்.