மதவாச்சி ஊடாக தடை செய்யப்பட்ட பெருமளவு பொருட்களையும் வெடிபொருட்களையும் வவுனியாவுக்கு ஆட்டோ ஒன்றில் கொண்டு சென்ற மூவரைக் கைது செய்துள்ள பொலிஸார் அவர்களிடமிருந்து அவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
மதவாச்சி பகுதியில் புதன்கிழமை இரவு பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போதே இந்தப் பொருட்களையும் இவற்றைக் கொண்டு சென்ற மூவரையும் பொலிஸார் பிடித்ததாக மதவாச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான இன்ஸ்பெக்டர் கே.ஏ.கொடித்துவக்கு தெரிவித்தார்.
இந்த ஆட்டோ இரகசியப் பாதை ஒன்றினூடாக வடபகுதிக்குச் செல்ல முற்பட்டபோதே ஆட்டோவும் அதில் கொண்டு செல்லப்பட்ட பெருமளவு பொருட்களும் துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டதாகவும் மூன்று இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், ஆட்டோவில் வந்த பிரதான சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாகவும் இவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த திடீர் சோதனையின் போது பின்வரும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மூன்று வோல்ட் சார்ஜர் பற்றரி- 48, சினைப்பர் ஸ்ரிக்கர் கார்ட் (அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டது)- 10 டிஜிட்டல் கமெரா- 5, டிஜிற்றல் தொலைபேசி கேபிள்- 4, புளுடுத் கேபிள்- 13, மின்சார அடெப்டர் பவர் கோட்- 5, டூ பிளக் டொப்- 6, திரீபின் பிளக் டொப்- 6, இய போன்- 10, நவீன வகை விலையுயர்ந்த டிஜிற்றல் கையடக்கத் தொலைபேசிகள்- 3, சாதாரண கையடக்கத் தொலைபேசிகள்- 5, ரி.-56 ரக துப்பாக்கி ரவைகள்- 12,000, மிளகுத்தூள் ஒரு பாய்க், பொலித்தீன் உறைகள் என்பன அடங்குவதாகவும் இச்சம்பவம் பற்றி விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.