* கலாநிதி பாலசிங்கத்தின் இருநூல்கள் வெளியீட்டு நிகழ்வில் நடேசன் விபரிப்பு
1980 களின் இறுதிப் பகுதிகளில் இந்திய தலைநகர் புதுடில்லியில் விடுதலைப் புலிகளுடன் நடத்தப்பட்ட பேரம் எம்.ஜி.ஆர். கொண்ட கோபம், அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்பன குறித்து விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
கிளிநொச்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரல் பாலசிங்கத்தின் "இரு இந்தியத் தலைவர்களும் விடுதலைப் புலிகளும்" மற்றும் `விடுதலை' ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வில் பா.நடேசன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு,
"இந்த விடுதலைப் போராட்டத்தில் தனது பங்களிப்பை பாலா அண்ணை பெரியளவில் செய்திருக்கின்றார். பாலா அண்ணை தொடர்பாக நாம் நிறைய கதைத்துக் கொண்டிருக்கலாம். எதிரிகள் பாலா அண்ணையை எவ்வாறு இல்லாது செய்யலாம், எவ்வாறு அவரைக் கொல்லலாம் என்று நீண்ட காலமாகவே அவர் இந்தியாவிலிருந்த காலத்திலிருந்து இறுதிக் காலம் வரை முயற்சித்தனர்.
இந்தியாவில் அவர் இருந்தபோது அவரது உயிரைப் பறிப்பதற்காக இலங்கை அரசாங்கம் குண்டு வைத்தது. அவர் இறுதிக் காலத்தில் நோய் வாய்ப்பட்ட காலத்தில் கூட அவர் வெளியில் சென்று சிகிச்சை பெறுவதற்குக் கூட இலங்கை அரசு அவரை அனுமதிக்கவில்லை.
நாம் இலங்கைக்கு எதிராகப் போராடும் நிலையில் அவர்கள் எப்படி நம்மை அனுமதிப்பார்கள் என்று நீங்கள் எண்ணலாம். உண்மையில் பல விடுதலைப் போராட்டக் களங்களில் இத்தகையதொரு மனிதாபிமானச் செயற்பாடுகள் நடைபெறுவது வழக்கமாக இருந்திருக்கின்றது.
பாலா அண்ணையின் உயிர் பறிக்கப்பட வேண்டுமென்பதிலும் அவர் இறக்க வேண்டுமென்பதிலும் அரசு மிகவும் தீவிரமாக இருந்தது. எங்களில் விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகச் செயற்படும் பல சக்திகள், பாலா அண்ணையின் உயிரை எவ்வாறு பறிக்கலாம் அவரை எவ்வாறு சாகடிக்கலாம் என்பதில் தீவிரமாக இருந்தார்கள். இவையெல்லாம் அவர் எதிர்நோக்கிய ஆபத்துகள் மட்டுமே.
அவரின் இராஜதந்திர நடவடிக்கைகள் ஏராளம். ஒருநாள் முழுவதும் மட்டுமல்ல - நாட்கணக்கில் - மாதக் கணக்கில் சொல்லிக் கொண்டிருக்கும் வகையிலான பல சம்பவங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். எமது தலைவர் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய பின்னர் நாம் சென்னையில் தங்கியிருந்தோம். அப்போது ஒருநாள், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். எங்களை அழைத்து "நீங்கள் டில்லிக்கு வர வேண்டும் அங்கே டில்லி அரசு உங்களோடு கதைக்க வேண்டுமாம்" என்று கூறினார்.
நானும் பாலா அண்ணையுடன் கூடவே அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருடன் டில்லிக்கு சென்றிருந்தோம். டில்லியில் நாம் ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டோம். எம்.ஜி.ஆர். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது டில்லியில் உள்ள இராஜதந்திரிகள் மற்றும் உளவுத்துறையினர் எம்மைச் சந்தித்து ஒரு அரைகுறையான தீர்வுக்கு முதலில் போகும்படியும் அதிலிருந்து தொடர்ச்சியாகப் போகலாம் என்றும் கூறி எங்களுக்கு பல்வேறு நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் தந்து கொண்டிருந்தனர்.
அப்போது எம்.ஜி.ஆர். எங்களைத் தனியாக அழைத்து உரையாடும் போது, வடக்கும் - கிழக்கும் இணைந்திருந்தால் ஒரு முதலமைச்சர், வடக்கு வேறு கிழக்கு வேறாக இருந்தால் 2 முதலமைச்சர் என்று இந்திய அரசு எமக்குக் கூறியதாக தெரிவித்தார். இந்திய அரசு இப்படிச் சொல்வதற்கும் என்ன அர்த்தம் என்று எம்.ஜி.ஆர். எங்களிடம் கேட்டார்.
அதற்குப் பாலா அண்ணை, எம்.ஜி.ஆரிடம் இந்தியாவின் நயவஞ்சகமான சூழ்ச்சியை மிக இலகுவாக விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார்.
எவ்வாறு திருச்சியையும் சென்னையையும் பிரிக்கலாம் எவ்வாறு தூத்துக்குடியையும் சேலத்தையும் பிரிக்கலாம். அப்படிப் பிரித்து கலெக்டர் (ஆட்சியர்) என்ற வேலையைச் செய்யச் சொல்வது தான் அதன் அர்த்தம் என்று விளங்கப்படுத்தினார்.
அத்துடன் மட்டுமல்ல - இந்திய மத்திய அரசு எவ்வாறு எங்களை ஒரு பொறிக்குள் வீழ்த்தப்போகிறது என்பதனையும் பாலா அண்ணா, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரிடம் விளக்கினார்.
அப்போது பாலா அண்ணை அளவளாவிய முறையைத்தான் குறிப்பிட வேண்டும். எமது தலைவர் மீது கொண்ட பாசம் - பற்றுக் காரணமாக "இப்படிச் செய்கின்றார்களே" என்று எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்து உடனடியாகவே எங்களையும் அழைத்துக் கொண்டு தமிழ்நாடு திரும்பினார்.
மேலும் "ஷ்ரீலங்கா அரசாங்கத்துடன் போராட உங்களுக்கு என்ன தேவை?" என்று எம்.ஜி.ஆர். எங்களைக் கேட்டார். எமது தலைவரின் அனுமதியோடு அப்போது பாலா அண்ணை பல வேண்டுகோளை எம்.ஜி.ஆரிடம் முன்வைத்தார். அதனை உடனே எம்.ஜி.ஆர். நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் - தமிழக சட்டசபையில் பல தீர்மானங்களையும் நிறைவேற்றினார்.
எமது தலைவர் தாயகத்திலிருந்து பல அரசியல் கோட்பாடுகளைக் கூறியபோது அதற்குத் தத்துவ வடிவம் கொடுத்து செயற்படுத்திய விதத்தை இதுவரை எந்த அரசியல் அறிஞரிடமும் நாம் கண்டதில்லை" என்றார்.