அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கும் அப்பால் சென்று இனநெருக்கடிக்கு இலங்கை தீர்வொன்றைக் கண்டால் அது மகிழ்ச்சியளிக்கும் விடயமென இந்தியா தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத்தை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ், இந்தியத் தூதுவர் ஆகியோருக்கிடையிலான இக்கலந்துரையாடலில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம், இனநெருக்கடிக்கு தீர்வுகாண அமைக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு, மட்டக்களப்பு உள்ளூராட்சிசபைத் தேர்தல் மற்றும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அடிப்படையாக கொண்டு இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வுகாணப்பட வேண்டுமென இந்தியா உறுதியாகவுள்ளதாகவும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று இனநெருக்கடிக்குத் தீர்வு காணப்பட்டால் அதையிட்டு இந்தியா மகிழ்வடையுமெனவும் இக்கலந்துரையாடலில் இந்தியத் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவுக்கு எதிராக ஜே.வி.பி. தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாதெனவும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அறியவருகிறது.
இக்கலந்துரையாடலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் செயலாளர் காங்கிரஸ் ஹஸன் அலி, உதவிச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஷாம் காரியப்பர் ஆகியோருடன் பிரதித் தூதுவர் மாணிக்கமும் கலந்துகொண்டுள்ளார்.