முன்னாள் பிரதி அமைச்சர் ஜெயசுந்தர விஜயக்கோனை கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மொனராகலை மாவட்டம் புத்தல பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து இவர் புதன்கிழமை அதிகாலை முதல் காணாமல்போயுள்ளார்.
இது குறித்து இவரது வீட்டு வேலையாள் புதன்கிழமை முற்பகல் மொனராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதையடுத்து, இவரது வீட்டிற்குச் சென்ற பொலிஸார் தேடுதலையும் விசாரணைகளையும் ஆரம்பித்தனர். வீட்டிலிருந்து இரு கைவிரல் அடையாளங்களைப் பெற்றுள்ள தடயவியல் நிபுணர்கள் இக்கையடையாளங்கள் இவருடையதா அல்லது வேறு எவருடையதா என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு தேடுதல்கள் நடைபெற்றுள்ளதுடன் முன்னாள் அமைச்சர் வீட்டிலிருந்து வாகனம் மூலம் வெளியே சென்றாரா என்பது குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இதேநேரம், இவரது எரிபொருள் நிரப்பு நிலையத்தை சேர்ந்த மூன்று ஊழியர்களது வாக்குமூலங்களை நேற்று பொலிஸார் பெற்றுள்ளனர்.
இவரைத் தேடிக் கண்டுபிடிக்கவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள் வதற்குமாக, ஊவா மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.என்.எஸ்.அம்பவெலவின் பணிப்பின் பேரில் இரு விசேட பொலிஸ் குழுக்கள் அமர்த்தப்பட்டுள்ளன.