`மனித உரிமை மேம்பாட்டுக்கு மேலும் பங்களிப்பு வழங்க முடியாத நிலை'
இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம நீதியரசர் பி.என்.பகவதியை தலைவராகக் கொண்ட புகழ் பெற்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சர்வதேச சுயாதீனக்குழுவானது இலங்கையில் தனது நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதென தீர்மானித்துள்ளது.
உரிய முறையில் கலந்தாலோசித்தும் அடிப்படைக் காரணங்களுக்காகவுமே இக்குழு இந்த முடிவை எடுத்திருக்கிறது.
இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தங்களால் எவ்வாறு மேலும் பங்களிப்பு செலுத்த முடியுமென்று தெரியவில்லையெனவும் அதனால் இலங்கையில் தமது நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதென்பதை கவலையுடன் தீர்மானித்திருப்பதாகவும் அக்குழு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புகழ் பெற்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சர்வதேச சுயாதீனக் குழுவை விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைத்திருந்தார்.
பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை கண்காணிக்கவே சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களையடுத்து இந்தப் புகழ் பெற்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சர்வதேச சுயாதீனக்குழு வரவழைக்கப்பட்டது.
புகழ் பெற்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சர்வதேச சுயாதீனக்குழு நேற்று வியாழக்கிழமை விடுத்திருக்கும் அறிக்கையின் இறுதியில் தெரிவித்திருப்பதாவது;
விசாரணை ஆணைக்குழுவின் அமர்வுகளை அவதானித்து தேவைப்படும் சிபார்சுகளை முன்வைக்குமாறும், இந்த அமர்வுகள் இடம்பெறும் தன்மைதொடர்பாக மதிப்பீட்டை மேற் கொள்ளுமாறும் அவை சர்வதேச விதிகள், தரத்திற்கு எதிராக இருக்கின்றதா என்று கணிப்பீடு செய்யுமாறும் ஆராயும் பொறுப்புகளை ஜனாதிபதி புகழ் பெற்ற உறுப்பினர்களை கொண்ட சர்வதேச சுயாதீனக்குழுவுக்கு ஒப்படைத்திருந்தார்.
தற்போதைய சூழ்நிலைகளுக்குமத்தியில் சாத்தியமான சகல பணிகளையும் குழுவினர் நிறைவு செய்துள்ளனர். இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்கவும் மேம்படுத்தவுமான நடவடிக்கைகளுக்கு மேலும் பங்களிப்பினை வழங்க முடியுமென தென்படவில்லை. அதனால், இலங்கையில் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதென வருத்தத்துடன் தீர்மானித்துள்ளனர்.
விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பாக புகழ்பெற்ற உறுப்பினர்கள் நன்கறிந்துள்ளனர். கடினமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் நீதியை உறுதிப்படுத்துவதற்கு தேவையான உண்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆற்றல் இல்லாத தன்மை உள்ளது. இவையாவற்றுக்குமான அடிப்படை விடயமாக சிறப்புரிமையே காணப்படுகிறது.
இதுவே முன்னர் பயனற்ற விதத்தில் விசாரணைகளுக்கும் இட்டுச்சென்றது. மனித உரிமைமீறல்களுக்குப் பொறுப்பானவர்களை எவராவது அடையாளம் காட்ட முன்வந்தால் அவரின் உயிருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அச்சுறுத்தலான சூழ்நிலை காணப்படுகின்றது. பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல்களை அடையாளம் காட்ட முற்படுவோரும் இதில் உள்ளடங்கியுள்ளனர்.
ஆணைக்குழு முன்னிலையில் பொதுமக்கள் மத்தியிலிருந்து சாட்சியமளிக்க முன்வரவில்லை. பாதுகாப்பு படையினரின் சாட்சியங்களும் தமக்கு தெரிந்ததை கூறுவதிலும் பார்க்க தம்மை தகுதியற்றவர்களாக்குவதற்கு முன்னுரிமை கொடுப்பதாக உள்ளது. இதன் பிரகாரம் ஆணைக்குழுவானது தனது அதிகாரத்தை முன்னெடுக்கக் கூடிய நிலைமையில் இல்லையென்பது ஆதார பூர்வமானதாகும்.
தொடர்ந்திருப்பதும் அடிப்படையானதுமான இந்தத்தடைகள், ஆணைக்குழுவானது வழக்குகள் தொடர்பாக விசாரணை செய்வதற்குரிய அரசியல்மற்றும் நிறுவன ரீதியான விருப்பமானது தொடர்ந்தும் இல்லாதிருப்பதையே வெளிப்படுத்துகின்றது என்ற முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாததாக உருவாக்கியுள்ளது.