Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கடத்தல், காணாமல்போதல் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கடும் குற்றச்சாட்டை முன்வைக்கிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்
[07 - March - 2008] [Font Size - A - A - A]
இலங்கையில் பரந்தளவில் இடம்பெறும் ஆட்கடத்தல்கள், காணாமற் மோதல் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு என்று குற்றம் சாட்டியிருக்கும் அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human rights watch) இந்தப் பிரச்சினைகள் தேசிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக சாடியுள்ளது.

நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கையில் இதனைச் சுட்டிக்காட்டியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், காணாமற் போனோர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டுமெனவும் இந்த நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்றும் அத்துடன், குற்றவாளிகளை பதிலளிக்கும் கடப்பாடுடையவர்களாக்க வேண்டுமெனவும் வலியுத்தியிருக்கிறது.

2006 இல் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் பாரிய மோதல்கள் மீண்டும் மூண்டதை தொடர்ந்து இலங்கைப் பாதுகாப்புப் படையினராலும் அரச சார்பு ஆயுதக் குழுக்களாலும் நூற்றுக் கணக்கான தனிப்பட்டவர்கள் கடத்தப்பட்டு அல்லது காணாமற் போயிருப்பதாகவும் அவர்களில் பலர் இறந்துவிட்டதாக அஞ்சப்படுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

`திரும்பத் திரும்ப இடம்பெறும் திகிலூட்டும் கனவு - இலங்கையின் காணாமல் போதல்கள், கடத்தல்களுக்கான அரசாங்கத்தின் பொறுப்பு' (Recurring Nightmare : State responsibility for ?Disappearences? and abductions in Sri Lanka??) என்ற தலைப்பில் 241 பக்கத்திலான அறிக்கையை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது.

பல நூற்றுக்கணக்கான விடயங்களில் 99 விடயங்கள் இதில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் இவை தொடர்பாக அளித்த பதில்கள் இந்தத் திகதி வரை போதாமல் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் 2006, 2007 இல் ஐ.நா.வின் பலவந்தமாக காணாமற்போதல் தொடர்பான செயற்குழு பதிவு செய்திருக்கும் காணாமற் போனோர் பற்றிய புதிய விபரங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. உலகில் இலங்கையிலேயே காணாமற்போதல் மிக அதிகமாக இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

`மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இப்போது அவரின் அரசாங்கமானது பலவந்தமாக ஆட்கள் காணாமற் போகும் விடயங்களில் உலகிலேயே மிக மோசமானதாக உருவாகியிருக்கிறது' என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பிரதிப் பணிப்பாளர் எலெய்ன் பியர்சன் கூறியுள்ளார்.

`இந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கும் வரை இந்த நெருக்கடி தொடருமென்பதே யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்தமையானது அர்த்தப்படுத்துகின்றது' என்றும் பியர்சன் கூறியுள்ளார்.

ஒருவரை சிறைப்பிடித்து அவர் எங்கு வைக்கப்பட்டிருக்கிறாரென்பதை வெளிப்படுத்தாமலோ அல்லது தடுத்து வைத்திருப்பதோ பல வந்தமாக காணாமற் போதல் என்ற குற்றத்தை அரசாங்கம் இழைக்கின்றது என்பது சர்வதேச சட்டமாகும். காணாமற் போவோர் பொதுவாக சித்திரவதை நீதி விசாரணைக்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு இலக்காவார்கள். இதனால் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு தொடர்ந்தும் துன்பமான நிலமையே ஏற்படும். பலவந்தமான முறையில் காணாமற்போதல் என்பது தொடர்ச்சியான உரிமை மீறல்களாகும். காணாமற்போன நபர் எங்கிருக்கிறார் என்பது பற்றியோ அல்லது அவரின் நிலை குறித்தோ எதுவும் தெரியாமல் போனால் இந்த உரிமை மீறல் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.

மனித உரிமை கண்காணிப்பகம் ஆவணப்படுத்தியுள்ள பதிவுகளில் பெரும்பாலானவற்றில் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டுள்ளனர். சில பதிவுகளில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் இனம் காட்டியுள்ளனர். தமது உறவினர்களை தடுத்து வைத்திருக்கும் விசேடமான இராணுவப் பிரிவுகள், இராணுவ முகாம்களை அவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். வேறு சில பதிவுகளில் சீருடையணிந்த பொலிஸார் விசேடமாக குற்ற விசாரணை திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் தமது உறவினர்கள் காணாமற் போவதற்கு முன்னால் கூட்டிச் செல்லப்பட்டதாக விபரித்துள்ளனர்.

40 வயதுடைய ட்ரக்வாகன சாரதியான வைரமுத்து வரதராஜன் 7 ஜனவரி 2007 இல் கொழும்பிலுள்ள தனது வீட்டிலிருந்து கடத்தப்பட்டார். 5 பிள்ளைகளின் தந்தையான அவரை அன்று முதல் காணவில்லை. இது தொடர்பாக அவரின் மனைவி மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு தெரிவிக்கையில், `சுமார் 20 பேரடங்கிய குழுவினர் வந்தார்கள். அவர்களில் சிலர் பொலிஸ் சீருடையில் காணப்பட்டனர். சிலர் சிவிலுடையிலிருந்து வீட்டை சூழ்ந்து கொண்டனர்.

பொலிஸ்காரர் ஒருவர் உள்ளே வந்து எமது அடையாள அட்டைகளை கேட்டார். அறையொன்றுக்குள் நான் சென்றேன். வெளியே வந்தபோது எனது கணவனை அங்கு காணவில்லை. அந்தப் பொலிஸ்காரரையும் காணவில்லை. ஓடிச்சென்ற போது இருட்டான இடத்தில் வீதியில் வானொன்று நின்றது. நான் வீதிக்கு ஓடிச்சென்ற போது வான் புறப்பட்டு சென்றுவிட்டது' என்று கூறியுள்ளார்.

இந்தச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களில் அநேகமானோர் தமிழர்களாகும். முஸ்லிம்கள், சிங்களவர்களும் இந்நடவடிக்கைகளில் இலக்காக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டிலேயே அநேகமாகனோர் பாதுகாப்புப் படையினரால் காணாமற் போகப்பட்டுள்ளனர். மதகுருமார், கல்விமான்கள், மனிதாபிமான உதவிப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் இலக்காக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்க சார்பு தமிழ் ஆயுதக் குழுக்களும் கடத்தல்களில் சம்பந்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புலிகளால் மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்கள் ஒப்பீட்டளவில் தாழ்ந்த மட்டத்திலுள்ளன. கடத்தல்களிலும் பார்க்க கொலைகளே புலிகளின் முன்னணி இலக்காக இருப்பதாக தென்படுகிறது. பொதுமக்களுக்கு எதிரான குண்டுத் தாக்குதல்கள், அரசியல் படுகொலைகள் பலவந்தமாக சிறுவர்களை சேர்த்துக் கொள்ளுதல், தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிவில், அரசியல் உரிமைகளை படிமுறையாக நசுக்குதல் என்பவற்றுக்கு விடுதலைப் புலிகள் பொறுப்பாளிகளாக உள்ளனர்.

இந்த நெருக்கடியை கவனத்திற்கெடுக்கையில் தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தும் தன்மை மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. பொறுப்பாளிகளை விசாரணை செய்யும் தன்மை போதாததாக உள்ளது. காணாமற் போதல், கடத்தல் தொடர்பாக சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு பாதுகாப்புப் படை உறுப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இலங்கையின் அவசரகாலச் சட்டமானது படையினருக்கு அதிகளவு அதிகாரங்களை கொடுத்திருக்கிறது. கண்மூடித்தனமாக கைது செய்தல், தடுத்து வைத்தல் போன்றவை பலவந்தமான முறையில் காணாமற் போதலுக்கு அனுசரணையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

`சிறப்புரிமையின் கீழ் படைவீரர்களும் பொலிஸாரும் `காணாமற்போதல்' நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட முடியும் என்பதுடன், பயங்கரமான குற்றச்செயல் மேலும் தொடரும்' என்று பியர்சன் கூறியுள்ளார்.

காணாமற் போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கண்காணிப்பகத்திற்கும் விசாரணை செய்வதற்குமென ராஜபக்ஷவின் அரசாங்கம் பல்வேறு விசேட அமைப்புகளை உருவாக்கியுள்ளது. ஆனால், எதுவுமே ஆக்க பூர்வமான பெறுபேறுகளை தரவில்லை.

இந்தப் பிரச்சினை குறித்து இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பாரதூரமானதாக கருதாத தன்மையையே வெளிப்படுத்தி வருகின்றதுடன், நெருக்கடியின் பரிமாணத்தை தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றதால் இந்த விடயங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள தோல்விகள் குறித்து ஆச்சரியப்பட முடியாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

்இத்தகைய துஷ்பிரயோகங்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்று பாதுகாப்புப் படையினருக்கு ஜனாதிபதியும் உயர் அதிகாரிகளும் தெளிவான சமிக்ஞையை அனுப்புவதற்கு தவறும் வரையில், `காணாமற்போதல்' பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அரசாங்கத்தின் பொறி முறைகள் யாவுமே வினைத்திறனற்றதாகவே தொடர்ந்தும் இருக்கும் என்று பியர்சன் கூறியுள்ளார்.

இலங்கையின் சர்வதேச பங்காளிகளும் ஐ.நா. அமைப்புகளும் `சிறப்புரிமை' தொடர்பாகவும் பெரும் எண்ணிக்கையானோர் காணாமற் போதல் குறித்தும் அதிகளவுக்கு கவலை தெரிவித்துள்ளன. அத்துடன் அரச படையினர் மற்றும் புலிகளால் மேற்கொள்ளப்படும் உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கையிடுவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு அலுவலகத்தை இலங்கையில் அமைப்பதற்கு அதிகளவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதற்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதையிட்டு மனித உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது.

`இலங்கை அரசாங்கத்தின் நிராகரிப்பானது மனித உரிமைகள் தொடர்பாக அரசு கொண்டிருக்கும் ஈடுபாட்டின் தன்மையை வெளிப்படுத்துகின்றது என்று பியர்சன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதேவேளை பலவந்தமாக ஆட்கள் காணாமற்போதலை முடிவுக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் இவை தொடர்பான சகல பதிவுகள் தொடர்பாகவும் நீதியான முறையில் விசாரணை செய்யுமாறும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தை அமைப்பதற்கும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டம் ஆகியவற்றை மோதலில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் எவ்வாறு மீறுகின்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கையிடுவதற்கு ஒத்துழைக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் `காணாமற்போதல்' நடைமுறையை நிறுத்துமாறும் `சிறப்புரிமை'யை முடிவுக்கு கொண்டுவருமாறும் சர்வதேச கண்காணிப்புக்குழுவை ஏற்றுக் கொள்ளுமாறும் இலங்கை அரசுக்கு வலியுறுத்துமாறும் இவற்றை நடைமுறைப்படுத்தினாலேயே இலங்கைக்கான மேலதிக இராணுவ மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் சாராத உதவிகள் தொடர்ந்து வழங்கப்படுமென அறிவுறுத்துமாறும் இலங்கையில் சர்வதேச பங்காளிகளான, விசேடமாக இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் மனித உரிமை கண்காணிப்பகம் அழைப்பு விடுத்துள்ளது.

Email this page Your Opinion Print this page
பிரிட்டிஷ் அமைச்சரின் விமர்சனம் தவறு ஜெனீவாவில் அமைச்சர் சமரசிங்க கவலை
பிரச்சினையை பெருப்பித்து காட்டுவதாக இலங்கை விசனம்
கடத்தல், காணாமல்போதல் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கடும் குற்றச்சாட்டை முன்வைக்கிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்
`கூட்டமைப்பு எம்.பி.க்களின் படுகொலைக்கான பொறுப்பை அரசு ஒருபோதும் தட்டிக்கழிக்க முடியாது'
புகழ்பெற்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சர்வதேச சுயாதீனக் குழுவின் பணி நிறுத்தம்
ரூபவாஹினி ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்
முன்னாள் பிரதியமைச்சரை தேடும் முயற்சியில் பொலிஸார் தீவிரம்
இலங்கை கடற்படையின் தாக்குதல்களால் தமிழக மீனவரின் வாழ்க்கை கேள்விக்குறி
40 சத வீதத்திற்கும் அதிகமான பாடசாலைகளில் முதலாம் ஆண்டு அனுமதியில் தொடர்ந்து இழுபறி
40 சத வீதத்திற்கும் அதிகமான பாடசாலைகளில் முதலாம் ஆண்டு அனுமதியில் தொடர்ந்து இழுபறி
13ஆவது திருத்தத்திலும் மேம்பட்ட தீர்வை முன்வைத்தால் இந்தியா வரவேற்கும்
பாதுகாப்புக்காக சார்க் உச்சிமாநாட்டை கொழும்பில்நடத்த அரசாங்கம் ஆராய்வு
உடரட்ட மெனிக்கேயில் வான் மோதி ஒருவர் பலி; இருவர் காயம்
சப்ரகமுவ மாகாண பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விஷேட நடவடிக்கை
இரத்தினபுரியில் மாலை நேரங்களில் கடும் மழை
13 ஆவது திருத்த அமுலாக்கம் இந்தியாவின் சூழ்ச்சியென இரு நாடுகளுக்குமிடையில் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி
தமிழர்களை இந்தியா கருணையோடு பார்ப்பதாக சிலர் மாயையில் உள்ளனர்
சர்வதேச சமூகத்திடம் இலங்கை எதனையும் மறைப்பதில்லை
புலிகளின் தலைவருக்கு காயமும் இல்லை நீரிழிவால் கால் அகற்றப்படவுமில்லை
போரில் பலியாகும் இராணுவத்தினர் குறித்த சரியான விபரம் தெரிவிக்கப்படுவதில்லை
ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீனா முடிவு?
டில்லியில் புலிகளுடன் நடத்தப்பட்ட பேரம் எம்.ஜி.ஆர். கொண்ட கோபம், அதன் விளைவுகள்
சமயபுரத்தில் கொள்ளை முயற்சியின் போது கடத்தப்பட்டவர் புதன் இரவு விடுவிப்பு
வட,கிழக்கிற்கு வெளியேயுள்ள தமிழ், முஸ்லிம் மாணவரின் எதிர்கால கல்வி நிலை கேள்விக்குறி
இரத்தினபுரியில் மீண்டும் சிக்குன் குன்யா பரவும் அபாயம்; விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்
வவுனியாவுக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல முயன்ற மூவர் கைது
கம்பஹா மாவட்ட ஐ.தே.க. அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பாருக்கை நியமிக்க முடிவு?
முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளால் வடகிழக்கில் எயிட்ஸ் தொற்றும் அபாயம் குறைவு
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைதுசெய்யக் கோரி புத்தளத்தில் சத்தியாக்கிரகம்
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் கடத்திய போதைவஸ்து; விபத்தில் கண்டுபிடிப்பு
அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வு திட்ட யோசனை சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com