ஆட்கள் பலவந்தமாக காணாமல்போதல் நடவடிக்கைகளில் உலகிலேயே மோசமாக குற்றமிழைத்தவர்களில் இலங்கை அரசாங்கமும் ஒன்றென மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டை நிராகரித்திருக்கும் கொழும்பு, இந்தப் பிரச்சினையின் பரிமாணத்தை மனித உரிமைகள் கண்காணிப்பகம் பெருப்பித்துக் காட்டுவதாக தெரிவித்துள்ளது.
கடந்த 12 மாதங்களில் காணாமல்போதல் சம்பவங்கள் அதிகளவுக்கு குறைந்து விட்டதாகவும் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் புதிய நடவடிக்கைகளினால் இவை வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித ஹோகண தெரிவித்ததாக பி.பி.சி. நேற்று குறிப்பிட்டுள்ளது.
`துரதிர்ஷ்டவசமாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் உண்மையான நிலைவரத்தை அளவுக்கு அதிகமாக பெருப்பித்துக் காட்டியிருப்பதாக' ஹோகண கூறியுள்ளார். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையானது நியாயமற்றதாகவும் பெறுமதியற்ற ஆதாரங்களையும் ஆச்சரியமான சான்றுகளையும் அடிப்படையாகக் கொண்டதுமாகவும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
காணாமல்போதல் தொடர்பாக அரசாங்கத்தின் விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் போது நேர்மையற்ற விதத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த அறிக்கையை விடுத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.