Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
கிளைமோர் தாக்குதலில் சிவநேசன் எம்.பி.பலி
[07 - March - 2008] [Font Size - A - A - A]
கிளைமோர் தாக்குதலில் சிவநேசன் எம்.பி.பலி

* உடன் சென்ற சாரதியும் கொல்லப்பட்டார்; வன்னியில் சம்பவம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. கிட்டினன் சிவநேசன் (51 வயது) நேற்று வியாழக்கிழமை பிற்பகல் வன்னியில் ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

இவருடன் இவரது வாகனச் சாரதியும் கொல்லப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்ட பின்னர் நேற்றுக் காலை இவர் கொழும்பிலிருந்து வன்னி திரும்பினார். இவ்வேளையிலேயே கனகராயன் குளம் மன்னகுளம் சந்திக்கு அருகில் கொல்லர்குளம் பகுதியில் நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் இந்தக் கிளைமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் வன்னி திரும்பியபோது வவுனியா ஓமந்தையுடன் இவரது மெய்ப்பாதுகாவலர்களான பொலிஸார் நின்றுவிட்டனர்.

ஓமந்தை இராணுவ சோதனை நிலையத்தைத் தாண்டி பிற்பகல் ஒரு மணியளவில் வன்னிக்குள் சென்ற இவர் மல்லாவி பகுதியிலுள்ள தனது வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கையிலேயே பிற்பகல் 1.50 மணியளவில் மன்னகுளம் சந்திக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவரும் சாரதியும் இந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மரமொன்றில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால், இவர்களது வாகனம் பலத்த சேதமடைந்ததுடன், வாகனச் சாரதி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த நிலையில் வாகனத்தினுள் கிடந்த இவர் பின்னர் மீட்கப்பட்டு மாங்குளம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் இடைவழியில் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மிகவும் சக்தி வாய்ந்த இந்தக் கிளைமோர் தாக்குதலுக்கிலக்காகி இவர்களது வாகனமும் பலத்த சேதமடைந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் இவரது வாகனச் சாரதியான வவுனியா வீரபுரத்தைச் சேர்ந்த எஸ். மகேஸ்வரராஜா (29 வயது) என்பவரே கொல்லப்பட்டார்.

சிவநேசன் எம்.பி. யின் படுகொலையுடன், கடந்த சில வருடங்களில் கொல்லப்பட்ட மூன்றாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. இவராவார்.

ஏற்கனவே, மட்டக்களப்பில் ஜோசப் பரராஜசிங்கமும் கொழும்பில் என்.ரவிராஜும் கொல்லப்பட்டனர். அண்மைக் காலமாக வன்னிக்குள் ஆழ ஊடுருவும் படையினர் பொது மக்களை இலக்கு வைத்து நடத்தி வரும் தாக்குதலின் தொடர்ச்சியாகவே நேற்றைய இந்தக் கிளைமோர் தாக்குதலும் இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ் சாட்டியுள்ளது.

வடமராட்சியில் கரவெட்டி கிழக்கை பிறப்பிடமாகக் கொண்ட இவர், 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தல் மூலம் பாராளுமன்றம் சென்றார்.

முன்னாள் ப.நோ.கூ. சங்க கிளை முகாமையாளரான இவர் நான்கு பிள்ளைகளின் (இரு ஆண், இரு பெண்) தந்தையாவார். சிறந்த தொழிற்சங்கவாதியான இவர் சிறந்த சமூக சேவகரும் பேச்சாளருமாவார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக வன்னியில் தங்கியிருந்து பாராளுமன்றம் சென்று வந்தார்.

வன்னியிலிருந்து இவர்கள் பாராளுமன்றத்திற்கு ஒவ்வொரு முறையும் வரும் போதும் ஓமந்தை சோதனை நிலையத்திலும் மதவாச்சி இராணுவ சோதனை நிலையத்திலும் படையினரின் பலத்த கெடுபிடிகளுக்குள்ளாவது குறித்து பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையைக் கிளப்பி வந்ததும் தெரிந்ததே.

சிவநேசன் எம்.பி.யின் பூதவுடல் நேற்று மாலை மாங்குளம் ஆஸ்பத்திரியிலிருந்து கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com