முல்லைத்தீவில் குளமுறிப்பு எனப்படும் பிரதேசத்திலுள்ள காட்டுப்பகுதியில் அமைந்துள்ள புலிகள் இயக்கத்தினரின் இரகசிய முகாம் ஒன்று விமானப்படையினரின் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த முகாம் புலிகள் இயக்கத்தின் முக்கிய தகவல் தொடர்பு மத்திய நிலையமாக அமைந்துள்ளதாகவும் இதுபற்றிய தகவல்களைத் தொடர்ந்து கடந்த 3 ஆம் திகதி விமானப் படையின் ஜெற் தாக்குதல் விமானங்கள் குளமுறிப்புப் பிரதேசத்தைச் சுற்றி வளைத்துத் தீவிர தாக்குதலை மேற்கொண்டு அந்த முகாமை முற்றாக அழித்ததாகவும் விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குளமுறிப்பு புலிகளின் தகவல் தொடர்பு முகாம் பற்றி விமானப்படையின் புலனாய்வுப் பிரிவிலிருந்து தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கேற்பவே அந்த முகாம் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்களுக்கேற்ப குளமுறிப்பு பகுதி ஒட்டுசுட்டானிலிருந்து வடகிழக்கேயுள்ள பிரதேசம் எனவும் அழிக்கப்பட்ட புலிகளின் தகவல் தொடர்பு முகாம் அங்கிருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளதெனவும் விமானப்படைத்தரப்பு தகவல்கள் மேலும் கூறியுள்ளன.
இதற்கேற்ப முகாம் அமைந்திருந்த நிலையம் சரியான முறையில் இலக்கு எடுக்கப்பட்டு ஜெற் விமானங்கள் மூலம் கடுமையாகத் தாக்கியழிக்கப்பட்டதாகவும் தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விமானக் கண்காணிப்புகள் மூலம் புலிகளின் இந்தத் தகவல் தொடர்பு முகாம் குண்டுத் தாக்குதலால் எரிந்து அழிந்துள்ளமை உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த முகாமிலிருந்த தகவல் தொடர்பு மற்றும் தொலைத்தொடர்பு உபகரணத் தொகுதிகளும் கருவிகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் விமானப் படைத்தரப்பு கூறியுள்ளது.
குளமுறிப்பிலுள்ள இந்த தகவல் தொடர்பு மத்திய நிலையம் மூலமாகவே புலிகள் இயக்கத் தலைவர்கள் வெலிஓய யுத்த முனையிலிருந்து தாக்குதல் நடவடிக்கைகளுக்காகப் புறப்படும் இராணுவப் படையணிகள் மீது தாக்குதல் தொடுப்பதற்கான தகவல் தொடர்புகளை மேற்கொண்டு வந்தனர் எனவும் இவ்வாறு வன்னியிலுள்ள புலிகள் இயக்கத் தலைவர்கள் முல்லைத்தீவு வரையான பகுதிகளிலிருக்கும் முகாம்களுடனும் தலைவர்களுடன் செய்திப் பரிமாற்றங்களை மேற்படி குளமுறிப்பு தகவல் தொடர்பு முகாம் மூலமாகவே செய்து வந்துள்ளனர் எனவும் இதனை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தமது செய்திப் பரிமாற்றச் சாதனங்கள் மூலமும் குறித்த பிரதேசத்திலிருந்து கிடைத்த தகவல்கள் மூலமும் விமானப் படையினர் உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பான தகவல்களில் தெரிவிக்கப்பட்ட இலக்கு தெளிவாக எடுக்கப்பட்டு வன்னித் தலைவர்களின் பிரதான செய்தித் தொடர்பு முகாம் அழிக்கப்பட்டதாக விமானப்படை மேலும் கூறியுள்ளது.
திவயின:4.3.2008