மன்னாரில் மடுப்பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிரதான இராணுவப் படையணியாகிய 57 ஆம் படையணிகள் அதன் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜகத் டயஸ் தலைமையில் தற்போது மடுப்பிரதேசத்துக்குள் பிரவேசித்து விட்டதாக பாதுகாப்புத்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மடுவை நோக்கிச் செல்லும் பிரதான பாதை வழியாக 572 படைகளும் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் தற்போது குறித்த படையணியினர் மடுவிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திலேயே நிலைகொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு இராணுவத்தினர் மடுப்பிரதேசத்துக்கு நுழைந்து விட்ட நிலையிலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதான வீதியில் முன்னேறி மடுப்பிரதேசத்துக்குள் பிரவேசிக்கும் தறுவாயில் இருக்கும் நிலையிலும் மடுப்பிரதேசத்தையண்டிய கேந்திரப் பகுதியாகிய பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்தைக் கைப்பற்றித் தொடர்ந்து மடு மத்தியை நோக்கி முன்னேறி வருகின்றனர். மடுவை அடைவதற்குப் படையினர் புலிகளுடன் இனிமேல் பெரிய மோதல்களில் ஈடுபடத் தேவையில்லை எனவும், புலிகள் அப்பகுதியிலிருந்து பின்வாங்கி விட்டதாகவும் இரண்டு மூன்று நாட்களுக்குள் மடுவுக்குள் இந்தப் படையணியினர் நுழைந்து விடுவர். இவ்வாறு முன்னேறியிருப்பது லெப்டினன்ட் கேணல் கித்சிறி லியனகேயின் கட்டளைத் தலைமையில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மூன்றாவது சிங்க றெஜிமென்ற் படையினராகும்.
இதேதருணம் மடுவுக்கு வடக்கே முக்கிய இடமாகிய பாலம்பிட்டிய பகுதியை நோக்கி 571 ஆவது படையணியினர் முன்னேறி வருவதாகவும் அவர்கள் இரணை இலுப்பைக்குளம், முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களைக் கைப்பற்றிய பின்னர் பாலம்பிட்டியை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
லெப்டினன்ட் கேணல் சேனக உதே சூரிய கட்டளைத் தளபதியில் 11 ஆம் காலாட்படை றெஜிமென்ற் அணியினரும் தற்போது பாலம்பிட்டியை நோக்கியே வெற்றிகரமாக முன்னேறிவருகின்றனர். அப்பகுதியிலேயே 8 ஆவது 9 ஆவது காலாட்படை றெஜிமென்ற்கள் பாலம்பிட்டியவுக்கு மூன்று கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளன.
எனவே, மடு மத்திக்கு அண்மையில் அமைந்திருக்கும் புலிகளின் கேந்திர நிலையமாகிய பாலம்பிட்டி ஒரு சில நாட்களுக்குள் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். மடுவிலுள்ள புலிகளின் பிரதான வழங்கல் நிலையமாக பாலம்பிட்டியவே இருப்பதால் அது கைப்பற்றப்பட்ட பின்னர் புலிகளுக்குப் பின் வாங்கிச் செல்வதைத் தவிர வேறு மார்க்கமில்லை. அத்துடன் மடுவைச் சுற்றி பல இராணுவப்படையணிகள் நிலைகொண்டிருப்பதால் தொடர்ந்து வரும் நாட்களில் புலிகள் இயக்கத்தினர் தமது இறுதித் தாக்குதல்களைச் செய்யவேண்டிய நிலையில் உள்ளனர். எவ்வாறாயினும் சுற்றிவர படைகள் நிலைகொண்டிருப்பதால் புலிகள் தாக்குதலை முறியடித்து மடுப்பிரதேசத்தை முற்று முழுதாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமின 03.03.2008