அவுஸ்திரேலியாவுடன் நடந்த பரபரப்பான தொடரில் இறுதி வெற்றிக் களிப்பு இந்திய அணிக்கே கிடைத்துள்ளதென்று அந்நாட்டு பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் பாராட்டியுள்ளன.
டெஸ்ட் மற்றும் முக்கோண ஒரு நாள் தொடர்களில் விளையாடுவதற்காக, இந்திய அணி அவுஸ்திரேலிய மண்ணில் காலடி வைப்பதற்கு முன்பாகவே கிரிக்கெட் உலகில் பரபரப்பு பற்றிக் கொண்டது. இந்திய வீரர்களின் மன உறுதியை குலைக்கும் நோக்கில், ஆஸி. வீரர்கள் வழக்கம்போல வாய்ச்சவடாலில் இறங்கினர்.
தங்களுக்கு கைவந்த கலையான `ஸ்லெட்ஜிங்'கை (எதிரணி வீரர்களை வெறுப்பேற்றி கவனத்தை சிதைக்கும் வகையில் கிண்டல் செய்வது) அரங்கேற்றினர்.
டெஸ்ட் தொடரில் கும்பிளே தலைமையிலான இந்திய அணி 1-2 தோற்றாலும், ஆஸி.அணிக்கு எல்லா வகையிலும் ஈடுகொடுத்து அசத்தியது குறிப்பாக, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பெர்த் களத்தில் வென்று சாதனை படைத்தது.
சர்ச்சையை கிளப்பிய சிட்னி டெஸ்டில் நடுவர்களில் தவறான முடிவுகளால் இந்திய அணி தோற்றது குறிப்பிடத்தக்கது. சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜனை குறிவைத்து ஆஸி. வீரர்கள் நிறவெறிக்குற்றச்சாட்டு, மோசமாக விமர்சித்து பேட்டி உட்பட பல்வேறு தாக்குதலில் இறங்கினர்.
அதேசமயம், இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா, பிரவீன் குமார் ஆகியோர் உலக சாம்பியன் ஆஸி. வீரர்களுக்கு சிம்ம சொர்ப்பனமாக உருவெடுத்தனர்.
கங்காருகளின் வாய்ச்சவடாலுக்கு அடிபணியாத இளம் இந்திய வீரர்கள், உடனுக்குடன் தக்க பதிலடி கொடுக்க தொடரில் அனல் பறந்தது. யாரும் எதிர்பாராத வகையில், முக்கோண தொடரின் இறுதியாட்டத்தில் அமர்க்களமாக விளையாடிய இந்திய அணி 2-0 என்று வென்று, ஆஸி. மண்ணில் முதல் முறையாக முக்கோண தொடரை வென்று சரித்திர சாதனை படைத்தது.
மாஸ்டர் பேட்ஸ் மேன் சச்சின் 2 இறுதியாட்டத்திலும் ஆஸி. பந்துவீச்சை சிதறடித்து அசத்தினார். தன்னை வசைபாடிய ஹைடன், சைமண்ட்ஸ் விக்கெட்டுகளை 2 இறுதியாட்டத்திலும் ஹர்பஜன் கைப்பற்றி பழிதீர்த்தார். இந்திய அணியின் மகத்தான வெற்றியை அவுஸ்திரேலிய பத்திரிகைகள் வெகுவாகப் பாராட்டியுள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு; டெய்லி ரெலிகிராப்; அனல் பறந்த கோடையில், போட்டிக்குப் போட்டி சர்ச்சையும் பரபரப்பும் நிலவிய தொடரில் 2-0 என நேர் செட்களில் வென்ற இந்திய அணிக்கே இறுதி வெற்றிச் சிரிப்பு கிடைத்துள்ளது.
தி அவுஸ்திரேலியன் : இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடி வென்றுள்ளது. சிட்னி டெஸ்ட் வெற்றியை ஆஸி. வீரர்கள் கொண்டாடியதைப் போலவே முக்கோண இறுதியாட்டத்தில் வென்ற இந்திய வீரர்களும் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஹெரால்ட்சன்; நிர்வாணமாக ஓடி வந்த ரசிகரை சைமண்ட்ஸ் இடித்து கீழே தள்ளினார். ஆனால், இந்திய வீரர்கள் முக்கோண தொடரை வென்று ஆஸி. வீரர்களை நொக் அவுட் செய்துவிட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளன.