உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்தி முக்கோண போட்டித்தொடரில் கிண்ணத்தை வென்ற இந்திய அணி நேற்றுக் காலை மும்பை திரும்பியது. அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா பங்கேற்ற போட்டித் தொடரில் இந்தியா, அவுஸ்திரேலியாவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.
இந்நிலையில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய வீரர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்டு நேற்றுக் காலை மும்பை திரும்பினர். காலை 11 மணியளவில் இந்திய வீரர்கள் மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கினர்.
மும்பை விமான நிலையத்தில் இந்திய வீரர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பளிக்கப்பட்டது. மும்பையிலிருந்து இந்திய வீரர்கள் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். டெல்லியில் இந்தியக் கிரிக்கெட் சபை சார்பில் வீரர்களுக்கு வரவேற்பளிக்கப்பட ஏற்பாடாகியிருந்தது.
முன்னதாக இந்திய வீரர்களை டெல்லி விமான நிலையத்திலிருந்து திறந்த பஸ்ஸில் வெற்றி ஊர்வலமாக அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
20 ஓவர் உலகக் கிண்ணத்தை வென்ற அணிக்கு மும்பையில் இத்தகைய வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது ரசிகர்கள் வெள்ளமென திரண்டதால் வீரர்கள், மும்பை மைதானத்தை வந்தடைய 5 மணி நேரத்திற்கு மேலானது.
டெல்லியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் என்பதாலும், இந்திய வீரர்கள் 3 மாத சுற்றுப்பயணத்தால் களைப்படைந்துள்ளனர் என்பதாலும் இத்திட்டம் கைவிடப்பட்டது. இந்திய வீரர்கள் விமான நிலையத்திலிருந்து நேராக ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.