Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
கிழக்கு உள்ளூராட்சித் தேர்தல்களும் அரசாங்கத்தின் நோக்கங்களும்
[08 - March - 2008] [Font Size - A - A - A]
காலகண்டன்

நாளை மறுதினம் மட்டக்களப்பில் ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. கிழக்கின் மீட்பு, கிழக்கின் உதயம் ஆகிய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் வரிசையிலேயே மேற்படி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதன் நீட்சியாக கிழக்கின் மாகாண சபைக்கான தேர்தலும் விரைவில் நடத்தப்படும் என்ற அறிவித்தலையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இவ்வாறு கிழக்கில் தேர்தல் நாடகத்தை அரங்கேற்றுவதன் மூலம் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் கிழக்கிலே ஜனநாயகம் மீண்டும் மலர்ந்திருக்கிறது என்பதை ஊர் உலகிற்கு அரசாங்கம் பறைசாற்றும் முயற்சி என்பது தெளிவானதாகும்.

ஆனால், அவ்வாறானதொரு ஜனநாயக சூழல் அங்கு நிலவுகின்றதா என்ற கேள்வி பிரதானமானதாகும். இயல்பு வாழ்வும் அச்சமற்ற வாழ்வுச் சூழலும் நடமாட உயிர்வாழ உள்ள சுதந்திரமும் ஜனநாயகத்தின் அடிப்படைகளாகும். இவற்றின் அளவுகோல் தான் ஜனநாயக சுதந்திர தேர்தலுக்குத் தேவையானதாகும். இவற்றை வைத்துப் பார்க்கும் போது கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கூறியவற்றின் அடிப்படைகள் யாவும் தகர்ந்து போய் உள்ள நிலையே காணப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தை யுத்தத்தின் மூலம் மகிந்த சிந்தனை அரசாங்கம் மீட்டிருக்கிறது. அந்த மீட்பானது கிழக்கில் பாரிய உயிர் உடைமை அழிவுகளைக் கொண்டு வந்திருக்கிறது. வரலாறு காணாத அவலங்கள் நிறைந்த இடப்பெயர்வுகளை உருவாக்கியது. இவை மட்டுமன்றி இந்த மீட்பு யுத்தத்திற்கு புலிகள் இயக்கத்தின் உடைக்கப்பட்ட ஒரு பிரிவினரும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது பகிரங்கமானதாகும். அது மட்டுமன்றி அத்தகைய ஆயுதக் குழுவினரைத் தம்முடன் அரவணைத்து வைத்துக் கொண்டே கிழக்கில் அரசாங்கம் சகல நிலைகளிலும் தமது கால்களை ஊன்றி நிலைக்கச் செய்து கொண்டது. கிழக்கில் இதுவரை இடம்பெற்ற சகலவிதமான கொலைகள் ஆட்கடத்தல்கள், மிரட்டல்கள் சொத்து அபகரிப்புகள் எவற்றுக்கு முறையான நீதி விசாரணைகளோ நியாயமான தீர்ப்புகளோ இடம்பெறவில்லை. அவற்றுக்கான இழப்பீடுகளோ மறுவாழ்வுக்குரிய வழிவகைகளோ தேடப்படவில்லை. விதவைகள் எனக் கூறப்படும் பெண்களும் பெற்றோரை இழந்த குழந்தைகளும் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோரும் பெரும் எண்ணிக்கையில் உள்ள பிரதேசம் என்றால் அது கிழக்கு மாகாணமாகவே இருந்து வருகின்றது.

இவை மட்டுமன்றி இன்றும் ஆயுதக் குழுக்களின் எல்லாவகை அட்டகாசங்களும் அங்கு இடம்பெற்று வரவே செய்கின்றன. இவற்றையெல்லாம் ஆயுதப்படைகள் மேற்பார்வை செய்து வருகின்றனவே தவிர தடுத்துநிறுத்தும் நிலை அங்கு பெருமளவிற்கு இல்லை. படுகொலைகளும் ஆட்கடத்தல்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன. நடு இரவில் வீடுடைத்து வயதுக்கு வந்த இரண்டு மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு இடம்பெற்றது. தெருவோரக் கொலைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

தேர்தலுக்காகக் கூட மேற்படி கொடூரங்களைக் குறைப்பதாகத் தெரியவில்லை. இவை யாவும் தற்செயலானவை அல்ல. அல்லது தனிப்பட்ட குரோதங்கள் கொண்டவை என்றும் கூற முடியாது. திட்டமிட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாகும்.

இவற்றுடன் யுத்தத்தால் இடம்பெயர்ந்து சொந்த இடங்களுக்குத் திரும்பாத மக்கள் இன்றும் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தமது எதிர்காலம் பற்றிய ஏக்கங்களுடனேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குரிய வாக்களிக்கும் சூழல் சிதறடிக்கப்பட்டுள்ளன. பொதுவாகவே கிழக்கின் மக்கள் தொடரும் கொடிய போரினாலும் கடல்கோள் உருவாக்கிய கோர அழிவுகளாலும் பாதிக்கப்பட்டு இன்றுவரை அவற்றிலிருந்து மீள முடியாதவர்களாகவே இருந்து வருகின்றனர். அவற்றுக்கான அரசின் திட்டங்கள் வெறும் பிரசாரத்திற்கு மட்டுமே உதவுவதாக இருந்து வருகின்றன. அதேவேளை, புனர்வாழ்வு புனரமைப்பு எனக் கூறிச் செயல்படுவதாகக் காட்டிக் கொண்ட அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களும் ஏனோ தானோ என்ற நிலையில் மட்டுமன்றி பாதிக்கப்பட்ட மக்களின் பெயரால் சுருட்ட வேண்டியவற்றைச் சுருட்டிக் கொள்ளும் வகையிலேயே நடந்தும் வருகின்றன. இருப்பினும், ஒரு சில வீட்டுத் தொகுதிகளையும் பாடசாலைகள் சிலவற்றையும் கட்டியெழுப்பி காட்சிப்படுத்துவதன் ஊடாகக் கிழக்கில் பிரமாண்டமான புனரமைப்பு இடம்பெறுவதாகவே காட்டப்பட்டு வருகின்றமையைத் தான் காண முடிகின்றது.

இத்தகைய ஒரு நிலை நீடித்து வரும் சூழலிலேயே அரசாங்கம் அவசர அவசரமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடாத்துகின்றது. இது உண்மையில் உள்ளூராட்சி சபைகளை மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்துக் கொள்ளும் ஒரு ஜனநாயக நடவடிக்கை என்று கொள்ள முடியாது. ஏனெனில், அதிகாரப் பரவலாக்களின் அம்சங்களோ அல்லது அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கங்களோ இதில் முக்கியத்துவம் பெறவில்லை.

அவற்றுக்குப் பதிலாக நீதிமன்ற ஆணையின் மூலம் வடக்கில் இருந்து பிரிக்கப்பட்ட கிழக்கில் மாகாணசபைத் தேர்தலை நடாத்திக் கொள்வதற்கான ஒரு பரீட்சார்த்த முன்னோடி நடவடிக்கையாகவே இவ் உள்ளூராட்சித் தேர்தலை அரசாங்கம் நடாத்துகின்றது. தெற்கின் மண்ணின் மைந்தர்களும் கிழக்கின் மண்ணின் மைந்தர்களும் இணைந்து நடாத்தும் இத்தேர்தல் ஜனநாயகம் சுதந்திரத்தை நிலைநாட்டுவதை விடத் தமது அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் திணித்து நிலைநாட்டும் குறிக்கோளையே கொண்டிருக்கிறது என்பது தெளிவானதாகும்.

இருப்பினும், இத்தேர்தலில் பங்குபற்றும் கட்சிகள் இயக்கங்களையும் அதில் பங்குகொள்ளாத கட்சிகள் பற்றியும் கவனத்தில் கொள்வது அவசியமாகின்றது.

இத்தேர்தல் மூலம் மட்டக்களப்பு மாநகர சபையையும் ஏனைய எட்டு பிரதேச சபைகளையும் தத்தமது அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்கான போட்டியில் ஆறு அரசியல் கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களும் இறங்கியுள்ளன. அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கருணா-பிள்ளையான் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற அரசியல் கட்சியுடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்படி தேர்தலையொட்டியே அவசர அவசரமாகத் தேர்தல் ஆணையாளரால் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஒரு கட்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் அங்கீகாரம் பெறுவது இலகுவான ஒன்றல்ல. அதற்கான விதிகளும் நடைமுறைகளும் இறுக்கமானவையாகும். அதன் காரணமாக இன்றும் சில கட்சிகள் அங்கீகாரம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இயங்கி வருகின்றன. ஆனால், இரண்டு விடயங்கள் இருந்தால் அங்கீகாரம் விரைவில் கிடைத்திடலாம் என்ற நம்பிக்கை அண்மைக் காலங்களில் ஏற்பட்டு வருகிறது. ஒன்று ஆளும் அரசாங்கத்தின் ஆசீர்வாதம், இரண்டாவது மறைமுகமாக ஆயுதங்கள் வைத்திருப்பது.

இந்த விதிகளுக்கு உட்பட்டே சகல ஆயுதம் ஏந்திய தமிழர் இயக்கங்களும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு பெற்றன என்பது நினைவுபடுத்தப்பட வேண்டியதாகும். இவை அனைத்தும் சுதந்திரம் ஜனநாயகம் கொண்ட பாராளுமன்ற ஆட்சி முறைமையின் பிரிக்க முடியாத அம்சங்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் எவ்வளவு ஆயுதங்கள் எவ்வளவு கொலைகள் எத்தனை ஆட்கடத்தல்கள் செய்தாலும் பரவாயில்லை. முன்பு கூறிய இரண்டு தகுதிகள் தான் அரசியல் கட்சிகளாக அங்கீகாரம் பெறமுடியும் என்ற நிலை தான் காணப்படுகின்றது.

இத் தேர்தலை ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன நிராகரித்துள்ளன. ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஏனைய முஸ்லிம் கட்சிகளும் போட்டியிடுகின்றன. இத் தேர்தல் மூலம் கிழக்கின் தமிழர்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை செயலிழக்க வைப்பதை நோக்காகக் கொண்டுள்ளமை ஒரு முக்கிய விடயமாகும். அதனைப் புரிந்து கொண்டமையினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்படி தேர்தலைப் புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அதேவேளை, அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து வரும் மூன்று தமிழ்க் கட்சிகளான ஈ.பி.டி.பி., புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். (வரதர் அணி) ஆகியன ஒன்றிணைந்து அரசாங்க - பிள்ளையான் கட்சிக் கூட்டுக்கு எதிராகப் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இவர்கள் கொழும்பில் ஐக்கியமும் கிழக்கில் போட்டியும் என்ற நிலையில் ஒருவரை ஒருவர் நிராகரித்தும் மிரட்டல்கள் தாக்குதல்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.

அதேவேளை, முஸ்லிம் கட்சிகளும் அரசாங்க சார்பாகவும் எதிர்ப்பாகவும் நின்று தேர்தலில் பங்குகொள்கின்றன. அங்கே கூட முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் இருந்து வருவதாக அண்மைய செய்திக் கசிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன.

இவை அனைத்தையும் நோக்கும் போது கிழக்கில் ஜனநாயகம் எந்த வழிமுறைகளின் ஊடாக நிலைநிறுத்தம் பெற்று வருகின்றது என்பது தெளிவாகிறது. இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகம் என்ற வாய்வீச்சுகளின் மத்தியில் சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் ஆயுதங்கள் எவ்வாறு முக்கியத்துவம் உடையனவாகவும் தேர்தல்களின் வாக்களிப்பில் செல்வாக்கு செலுத்தி வருகின்றன என்பதற்கும் நாளை மறுநாள் நடக்கப்போகும் தேர்தல் உச்சநிலை உதாரணமாக அமையும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. "எமக்கு எதிரானவர்கள் ஆயுதங்களைக் கையாண்டால் அது பயங்கரவாதம். அதே ஆயுதங்களை நானும் எனக்கு ஆதரவானவர்களும் கையாண்டால் அது ஜனநாயகம்" இது தான் அமெரிக்கா முதல் இந்தியா வரை மட்டுமல்ல இலங்கையில் மகிந்த சிந்தனையின் ஜனநாயகம் பயங்கரவாதம் பற்றிய வரையறையாகும். இந்நிலையில் தான் ஜனநாயகத் தேர்தல்கள் இடம்பெறுகின்றன. கிழக்கின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சித் தேர்தலும் இதற்கு விதிவிலக்கான ஒன்றல்ல.

மகிந்த சிந்தனை அரசாங்கம் கிழக்கின் தேர்தல் முடிந்ததும் மேலும் தமது யுத்த நிகழ்ச்சி நிரலை வேகப்படுத்தி முன்னெடுக்கும் என்பதில் ஐயமில்லை. இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையோ அதன் மூலமான நியாயமான அரசியல் தீர்வோ என்பதெல்லாம் அரசாங்க நிகழ்ச்சி நிரலில் இருக்க மாட்டாது. கிழக்கைத் தொடர்ந்து வடக்கிலும் தேர்தல் நாடகம் தொடரப்படும் சூழல் உருவாகும். அதற்கு முன் அங்கு ஒரு ஆலோசனைச் சபை தோற்றுவிக்கப்படும். இவற்றின் அடிப்படை நோக்கும் போக்கும் பேரினவாத ஒடுக்குமுறை என்பது தெளிவானதாகும்.

ஆனால், அரசாங்க கொள்கை வகுப்பாளர்கள் விரும்புவது போன்று நிலைமைகள் அமையமாட்டாது. ஏனெனில், தேசிய இனப்பிரச்சினையும் அது தோற்றுவித்துள்ள யுத்த சூழலின் யதார்த்தமும் பல்வேறு சிக்கல்கள் நெருக்கடிகளை மேலும் தோற்றுவிக்கவே செய்யும். அதனால், கிழக்கில் இடம்பெறும் தேர்தளால் மட்டும் அரசாங்கம் ஆறுதல் அடைந்துவிடமுடியாது.

Email this page Your Opinion Print this page
மகளிர் நலன்கள் மீது கூடுதல் முதலீடு அவசியம்
கிழக்கு உள்ளூராட்சித் தேர்தல்களும் அரசாங்கத்தின் நோக்கங்களும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com