* சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு
ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தொரயா அஹமத் ஒபெய்த் விடுத்திருக்கும் செய்தி
பெண்கள் மற்றும் மகளிர் நலன்களில் முதலீடு செய்வது சிறப்பானது. இந்த வருடத்திற்குரிய சர்வதேச மகளிர் தினத்தில், அரசுகள், பெண்கள் மற்றும் மகளிர் நலன்களில் மேற்கொள்ளும் முதலீடு மிகச் சிறந்தவற்றுள் ஒன்றாக அமையும் என்பதை ஐ.நா. சனத்தொகை நிதியம் மீளவும் வலியுறுத்துகிறது.
பெண்களது நலன்கள் மீதான முதலீடு என்பது குடும்பங்கள், சமூகங்கள், தேசங்கள் மீதான முதலீடாகும். பெண்கள் வளங்களைப் பெறும்போது, அந்த வளங்களை தமது பிள்ளைகளின் கல்வியிலும், சுகாதாரத்திலும் அவர்கள் செலவழிக்கிறார்கள். அதன் பயனாக, பிள்ளைகள் சிறந்த வாழ்க்கையையும் தொழில் வாய்ப்புகளையும் பெற முடிகிறது. உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் பெண்களின் பங்களிப்பும் வருவாயும் அதிகரிக்கும்போது வறுமை குறைந்து, பொருளாதார வளர்ச்சி வேகம் பெறுகிறது.
நாம் மில்லேனிய அபிவிருத்தி இலக்குகளை அடைய வேண்டுமானால் பெண்கள் மற்றும் மகளிர் நலன்கள் மீது கூடுதல் முதலீடு செய்வது அவசியம். மனித உரிமைகள், அரசியல், பொருளாதாரம் என்ற எந்தக் கோணத்தில் பார்த்தாலும் முடிவு ஒன்றுதான். அது பெண்களின் நலன்கள் மீதான முதலீடுகள் நியாயமானது என்பதை காட்டுகிறது. இதன் அனுகூலங்கள் சிறப்பானவை. பெண்களுக்கு மாத்திரமல்லாது முழு உலகத்திற்கும் கிடைப்பவை.
பல நாடுகளும், சமூகங்களும் இதற்குரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. பெண்கள் வளமானவர்களாகவும், பாதுகாப்பு மிக்கவர்களாகவும், தம் வாழ்க்கையை தாமே கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்கக்கூடிய உலகம் என்ற இலட்சியத்தை அடையத் தேவையான கொள்கைகளை உருவாக்குவதற்கும் தேவையான வளங்களை ஒதுக்குவதற்கும் உரிய அரசியல் கடப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், தேவைப்படும் அளவு முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதில்லை. ஒரு சில பிரதேசங்களில் தேவைகள் அதிகரிக்கும்போது, நிதியொதுக்கீடுகள் குறைகின்றன. தாய் சேய் சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு போன்ற துறைகளில் இந்தப் போக்கைக் காணலாம். பெண்களின் சுகாதாரத்தை, அதுவும் இனவிருத்தி சுகாதாரத்தை விருத்தி செய்யாமல் சேமநலன்களை விருத்தி செய்ய முடியாது.
இன்றைய உலகில், கர்ப்பந்தரித்தல், பிரசவம் சார்ந்த சிக்கல்கள் காரணமாக நிமிடத்திற்கு ஒரு பெண் பலியாகிறார். 20 கோடிக்கு மேலான பெண்கள் சார்ந்த குடும்பத் திட்ட தேவைகள் நிறைவேற்றப்படுவதில்லை. ஒவ்வொரு வருடமும் 20 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் எயிட்ஸ் ஆட்கொல்லிக்குப் பலியாகின்றனர். எச்.ஐ.வி. கிருமி தொடர்ந்து பரவுவதோடு, மக்களின் வாழ்க்கைக்கும் தேச அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாகத் திகழ்கிறது.
அகில ரீதியில் சகலரும் இனவிருத்தி சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதிகளை உறுதி செய்வதன் மூலம் நாம் வறுமையைக் குறைக்கலாம். எயிட்ஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம். குடும்பத் திட்டமிடல் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். அத்துடன், சிசு மரண, குழந்தை மரண, பிள்ளை மரண வீதங்களைக் குறைக்கலாம்.
இன்றைய தினத்தில், பெண்கள் மற்றும் மகளிர் மீதான முதலீடுகளை அதிகரிக்குமாறு நாம் அரசுகளைக் கோருகிறோம். சகல தரப்புக்களும் தேசிய சுகாதார முறைமைகளிலும் பிரசவ பரிசாரர்களைப் பயிற்றுவிப்பதிலும் குடும்பத் திட்டமிடலிலும் முதலீடு செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
`நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பெண்களின் இனவிருத்தி சுகாதாரம் மற்றும் சேமநலன்கள் மீது முதலீடு செய்வதன் மூலம் மிலேனிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்து, பால்நிலை சமத்துவம் என்பதை யதார்த்தபூர்வமானதாக மாற்றக்கூடியதற்குரிய சிறந்த வாய்ப்பு கிட்டும்.