Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
தொண்டர் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் முயற்சிகள் குறித்து...
[08 - March - 2008] [Font Size - A - A - A]
அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் அவற்றைக் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கத் தீர்மானித்திருக்கின்றது. பாதுகாப்பு அமைச்சும் சமூக நல விவகார அமைச்சும் உள்நாட்டலுவல்கள் அமைச்சும் கூட்டாக இதற்கான சட்ட விதிகளைத் தயாரிப்பதில் ஈடுபாடு காட்டி வருவதாக சமூக நலத்துறை அமைச்சின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எமது நாட்டில் உள்ளூர், சர்வதேச அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் நீண்டகாலமாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் செயற்பாடுகள், சேவைகள் அளப்பரியன. நெருக்கடியான சூழ்நிலை தோன்றிய காலம் தொட்டு பாதிக்கப்படுகின்ற மக்களின் நலனுக்காக அந்த நிறுவனங்கள் ஆற்றி வரும் பங்களிப்பானது மட்டிட முடியாதனவாகும். நாட்டில் கூடிய விரைவில் சமாதானச் சூழ்நிலை ஏற்பட வேண்டுமென்பதற்காகவும் இந்த சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் முனைப்புக் காட்டி வருகின்றன. இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து மனிதாபிமானக் கண்ணோட்டத்துடனேயே இந்த நிறுவனங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த உள்ளூர், சர்வதேச தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளில் சிறு சிறு குறைபாடுகள் காணப்படலாம். ஆனால், அவற்றின் பரந்துபட்ட பணிகளை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. குறிப்பிட்ட சில பேரினவாத அரசியல் சக்திகள் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டு அவற்றை விமர்சிப்பதையும் அவற்றின் மீது சீறிப்பாய்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இனவாதக் குரோத மனப்பான்மையின் வெளிப்பாட்டையே இதன்மூலம் அவதானிக்க முடிகிறது. இந்த தொண்டு நிறுவனங்கள் மீது கண்டனக் கணை தொடுக்கும் சக்திகள் முழுக்க முழுக்க இனவாதப் போக்குடையவையாகவே காணப்படுகின்றன. ஜே.வி.பி. அதனுடன் இணைந்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், ஹெல உறுமய போன்ற அமைப்புகளே இதில் தீவிரம் காட்டி வருகின்றன.

போருக்கு எதிரான சக்திகளை கடுமையாக விமர்சிப்பதிலும் இந்த இனவாதச் சக்திகள் பின்னிற்கவில்லை. நாட்டில் சமாதானம் மலர வேண்டுமென்பதற்காக பெரும்பாலான அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் போருக்கெதிரான அமைப்புகளும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும்போது பேரினவாதச் சக்திகள் இதற்குத் தடை போடும் விதத்தில் மக்களை தவறாக வழி நடத்தப் பார்க்கின்றன. இத்தகைய விசமத்தனமான செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அரசாங்கம் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இனவாதச் சக்திகளின் தாளத்துக்கு ஆட முற்படுவதானது எதிர்காலத்தில் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தவே வழி வகுக்கும் என்பதைப் புரிந்து கொள்ளத் தவறுவது கவலையளிப்பதாகவே உள்ளது.

தவறிழைக்கும் அரச சார்ப்பற்ற தொண்டர் நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதை நாம் தவறெனக் கூறமுற்படவில்லை. அனைத்து தொண்டர் நிறுவனங்களையும் ஒரே குட்டைக்குள் போட்டுப் பார்க்க முனைவதானது ஆரோக்கியமான செயற்பாடாக ஏற்றுக்கொள்ள முடியாது. தொண்டர் நிறுவனங்கள் மீது ஆரோக்கியமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை குறை காண முடியாது. ஆனால், ஒரு சில இனவாதச் சக்திகளைத் திருப்திப்படுத்தி தனது அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டும் இது போன்ற கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டு வர அரசு முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு செயற்பட்டால் அது மோசமான நிலையை நாட்டில் உருவாக்கி விடும். இந்த முயற்சியானது ஒருதலைப்பட்சமானதாகவும் அரசியல் நோக்கத்தைக் கொண்டதாகவுமே உள்ளதை நன்கு அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

கடற்கோள் அனர்த்தம் நிகழ்ந்த காலப்பகுதியிலும் அதனைத் தொடர்ந்து வந்த பல்வேறுபட்ட நெருக்கடிகளின் போதும் உள்ளூர், சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் ஆற்றிய பணிகளை நாடு இலகுவில் மறந்து விடமுடியாது. நாட்டின் பொருளாதார நெருக்கடி நாட்டு மக்களை படாதபாடுபடுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அவசரப்பட்டு தொண்டர் நிறுவனங்களுக்கு கால் கட்டுப் போட தீவிரம் காட்டப்படுமானால் அதனால் ஏற்படக் கூடிய தாக்கங்களுக்கு முகம் கொடுக்கும் சக்தி அரசுக்கு இருக்கின்றதாவென்ற கேள்வியும் எழுகிறது. இத்தகைய பலத்த சவாலை எதிர்கொள்ள இன்றைய சூழ்நிலையில் நாடு இருக்கின்றதாவென்பதை அரசு நிதானமாகச் சிந்திக்க முன்வர வேண்டும். அவசரப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் இந்த நாட்டை எங்கு கொண்டு போய் நிறுத்தும் என்பதையிட்டு அரசு விழிப்புடன் சிந்தித்துச் செயற்படவேண்டும்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com